Coimbatore Water Scarcity: ஒரு வாரமாக தண்ணீர் இல்லை.. அவதியில் கோவை மக்கள்! காரணம் என்ன?
Coimbatore Water Scarcity: குந்தா அணை பராமரிப்பு பணிகள் காரணமாக பில்லூர் குடிநீர் திட்டத்தின் II, III கட்டங்கள் மற்றும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி–வீரகேரளம் (KVV) ஆகிய தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளன.

கோவை: குந்தா அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளைத் தொடர்ந்து பில்லூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், கோயம்புத்தூரின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. தினசரி அவசிய தேவைகளுக்குத் தேவையான நீர் கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.
தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) மேற்கொண்டு வரும் குந்தா அணை பராமரிப்பு பணிகள் எதிர்பார்த்ததை விட நீண்டுகொண்டே போனதால், பில்லூர் குடிநீர் திட்டத்தின் II, III கட்டங்கள் மற்றும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி–வீரகேரளம் (KVV) ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்திலும் விநியோகம் தடைப்பட்டுள்ளன.
மழையால் தாமதமான பணிகள்:
ஆரம்பத்தில் 2–3 நாட்கள் இடைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பருவமழை தாக்கம் காரணமாக அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை, பராமரிப்பு பணிகளை மந்தமாக்கி, இடைநிறுத்தம் ஒரு வாரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் நகரின் பெரும்பகுதிகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றன.
முன்கூட்டியே தகவல் இல்லை:
திடீர் தடை குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டிருந்தால், தண்ணீர் சேமித்து வைத்திருப்போம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனட்
"ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. தடைக்கு முன் ஒரு முறை தண்ணீரானது விநியோகம் செய்யப்பட்டிருந்தால் நாங்கள் தயாராக இருக்க முடிந்திருக்கும்," என்று பொதுமக்கள் தெரிவித்தனர்
தனித்தொழில் செய்பவர்கள், முதியவர்கள் மற்றும் குடும்பங்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தண்ணீர் பற்றாக்குறையால் தினசரி வாழ்க்கையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். "வானிலை குளிர்ந்தாலும், தண்ணீர் இல்லாததால்தான் வீட்டில் உண்மையான ‘வெப்பம்’ எங்களுக்கு தான்," என பலர் ஏமாற்றத்துடன் கூறுகின்றனர்.
CCMC: சனிக்கிழமை மாலைக்குள் பணிகள் முடியும்
பொதுமக்களின் புகாருக்கு பதிலளித்த கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் எம். சிவகுரு பிரபாகரன், TNEB மேற்கொண்டு வரும் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை மாலைக்குள் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது “கோவை நீர் விநியோகத்தின் முதன்மை ஆதாரம் பில்லூர். பராமரிப்பு காரணமாக பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. TNEB-க்கு இடையிடையே நீர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அதே நேரத்தில் நகரத்தின் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி சூழ்நிலையை சமாளித்து வருகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
CCMC மற்றும் TWAD வாரியங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றன. நீர் விநியோகம் மீண்டும் எப்போது சீராகும் என்ற எதிர்பார்ப்புடன், குடியிருப்புகள் சிரமங்களைக் கடந்து காத்திருக்கின்றன.























