கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி முதல்வர் அதிரடி கைது
கோவை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையில் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான 17 வயது பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காதது தான் தற்கொலைக்கு காரணமென தெரிவித்து அவரையும் கைது செய்யக்கோரி, பள்ளி மாணவியின் உறவினர்கள் இரண்டாவது நாளாக நேற்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, அப்பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் நேற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பள்ளி முதல்வரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைத்து தேடி வந்தனர்.
இந்தநிலையில், கோவை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை வரும் 26 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.