Crime : பதவிக்காக பாஜக பிரமுகர் செய்த பலே காரியம்... போலீசில் வசமாக சிக்கிய எப்படி?
பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்து கட்சியில் ஏதாவது பதவி பெறவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு பெற்று பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் நாடகமாடியது அம்பலமானது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாஜகவில் கட்சி பொறுப்பு பெற பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். 32 வயதான இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூப்பரவைசராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வநாதன் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக மாநில செயற்குழு உறப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் உமாசங்கர் ஆகியோரிடம் தனக்கு கட்சியில் பொறுப்பு வழங்குமாறு விஸ்வநாதன் வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் விஸ்வநாதனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விஸ்வநாதன் தொடர்ந்து இவர்களிடம் கேட்டதோடு, தனக்கு கட்சியில் பொறுப்பு வழங்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் காழ்புணர்ச்சியோடு விஸ்வநாதன் இருந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு விஸ்வநாதன் தனது வீட்டில் இருந்த போது பாஜக நிர்வாகிகளான சதீஷ்குமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் தன்னைத் தாக்கி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, விஸ்வநாதன் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உமாசங்கர், சதீஷ்குமார் ஆகியோர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்களை கொலை முயற்சி வழக்கில் சிக்க வைத்து பழிவாங்கும் நோக்கில் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. மேலும் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு, அதனை பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்து கட்சியில் ஏதாவது பதவி பெறவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு பெற்று பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து விஸ்வநாதன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தனக்குத்தானே சட்டையில் தீ வைத்துக் கொண்டு பாஜக நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்