கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை ; சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி..
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது.
![கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை ; சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி.. Coimbatore people are suffering due to waterlogging on the roads due to heavy rain கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை ; சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/d318daf511b4a2eaf6776226bf4259d81698892022642188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. நேற்றிரவு 10 மணியளவில் ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியங்குளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், செல்வபுரம், வெள்ளலூர், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த கனமழையால் அவிநாசி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் கோவை அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீர் தேங்கி இருப்பதால் பாலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை காரணமாக பயனீர் மில்ஸ் பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் சில வீடுகளில் கழிவு நீருடன் கலந்து மழை நீர் புகுந்தது. ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் உள்ள சிவவிஷ்ணு கோவில் அருகே உள்ள ஒரு வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த வீட்டில் வசித்த குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினார்கள். இந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல போத்தனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் மழையினால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், மழை நீர் சாலைகளில் தேங்குவதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)