சூலூர் அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரியும் கொள்ளையர்கள் - பொதுமக்கள் அச்சம்
நள்ளிரவில் முகமூடியுடன், கையுறை அணிந்து, கைகளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து சுற்றி தெரியும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த காடாம்பாடி ஊராட்சியில் என்.எஸ்.கே அவென்யூ, நேரு நகர், கிருஷ்ணா கார்டன், பிரின்ஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் முகமூடியுடன், கையுறை அணிந்து, கைகளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் முகத்தை மறைத்தபடி வீதிகளில் சுற்றித் திரியும் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் வதிவானது. இந்த காட்சிகளை அப்பகுதி மக்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி சுற்றுவட்டார கிராம மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காடம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன்பே பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூலூர் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் சுற்றி வந்து வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.