(Source: ECI/ABP News/ABP Majha)
எஸ்.பி. வேலுமணியை தீவிரவாதி என சித்தரித்து போஸ்டர்கள் - கோவையில் பரபரப்பு
குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஏராளமான அதிமுகவினர் புகார் அளித்தனர்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லம் அமைந்துள்ளது. இவர் தற்போது தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சி கொறடாவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியில் நேற்று மூன்று இடங்களில் எஸ்.பி. வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருப்பது குறித்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதிமுக தொண்டர்கள் அந்த போஸ்ட்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.
அதை பார்த்து அதிமுகவினர் நேற்று இரவு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒன்று திரண்டனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு இரவு நேரத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுவரொட்டி ஒட்டிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், மத சமூக விரோதிகள் யாரோ முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக அவரது புகைபடத்தையும் அதன்கீழ் தீவிரவாதி என்ற வாசகத்துடன் கூடிய துண்டு போஸ்ட்டர்களை ஒட்டியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். மேலும் இதற்கு முன்பும் இதுபோல் நடந்த சம்பவம் குறித்து புகாரளித்த நிலையில் உதவி காவல் ஆணையாளர் ரகுபதிராஜா முறையாக விசாரிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியம் காட்டியதால் சமூக விரோதிகள் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீதும், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை தீவிரவாதி என சித்தரித்து போஸ்டர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.