கோவையில் குட்கா விற்பனை செய்ததாக கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்; பொய் புகார் என வியாபாரி குற்றச்சாட்டு
காவல் துறையினரும், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவர்கள் கொண்டு வந்த புகையிலைப் பொருட்களை கடையில் வைத்து, கடையில் இருந்து எடுத்தது போல புகைப்படம் எடுத்து சீல் வைத்ததாக புகார் அளித்தார்.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் கோவில்பாளையம் காவல் துறையினர் சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மீது கோவில்பாளையம் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் சண்முகம் முன்னிலையில் கடைக்கு சீல் வைத்தனர். கடைக்கு சீல் வைக்கும் முன் கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்து புகைப்படம் எடுத்தனர். இவையனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.
இந்நிலையில் தங்கள் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யவில்லை எனவும், காவல் துறையினரும், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளும், தாங்கள் கொண்டு வந்த புகையிலைப் பொருட்களை கடையில் வைத்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார். அதில் கடந்த 4 ம் தேதியன்று காவல் துறையினரும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சேர்த்து அவர்களே கொண்டு வந்த புகையிலை பொருட்களை கடையில் இருந்து எடுத்தது போல புகைப்படம் எடுத்து, பொய்யான சாட்சிகளை உருவாக்கினர் எனவும், எங்களை மிரட்டி காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும், கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது, “கடந்த டிசம்பர் 3-ம் தேதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தான் அவை. இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டார். அவர் மீது அன்றைய தினமே வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த கடையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து கொண்டு, உணவு பாதுகாப்பு அதிகாரியுடன் கடையை சீல் செய்யும் அலுவல் நடைமுறைக்காக டிசம்பர் 4-ம் தேதி சென்றனர். அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது" எனத் தெரிவித்தார்.