![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானைகள்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்புவாசிகள்
பொன்னூத்து வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் மற்றும் அதன் குட்டி யானை தாளியூர் கிராமத்துக்குள் புகுந்தது. ஒரு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு காட்டு யானை உள்ளே செல்ல முயன்றது.
![வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானைகள்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்புவாசிகள் Coimbatore news elephants that entered the house Residents luckily escaped - TNN வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானைகள்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்புவாசிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/7f279abd575e359dbd6161612c8c9a3e1704861297595188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் தடாகம் பன்னிமடை அடுத்த தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் குமார்- தங்கமணி தம்பதியினர் 8 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். இவ்வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் ராஜேஷ்வரி மூதாட்டியும் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை பொன்னூத்து வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் மற்றும் அதன் குட்டி யானை தாளியூர் கிராமத்துக்குள் புகுந்தது. இதனைத்தொடர்ந்து நடராஜ் என்பவரது வீட்டிற்குள் புகுந்த யானைகள், வீட்டின் முன்பு உணவு பொருட்களை தேடியது.
பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி உள்ளனர். அப்போது அவர்கள் சாப்பிடுவதற்காக வாங்கி வைத்திருந்த தேங்காய் பர்பி மிட்டாயை எடுத்து யானைகள் சாப்பிட்டுள்ளது. தொடர்ந்து பயத்தில் இருந்த நடராஜ் குடும்பத்தினர் சமையல் அறையில் இருந்த முட்டை கோஸ்களை வெளியே தூக்கி வீசினர். இதனை அடுத்து அந்த யானைகள் வீட்டில் இருந்து வெளியேறியது. பின்னர் அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் உள்ள பழனிச்சாமியின் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் குமாரின் வீட்டு கதவை உடைக்க முயன்ற நிலையில் குமார் அவரது மனைவி தங்கமணி ஆகிய கதவை உள்பக்கமாக இருந்து தாங்கி பிடித்துக்கொண்டு சத்தம் எழுப்பியுள்ளனர்.
ஆனாலும் யானை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றது. அப்போது தாய் யானை அருகில் உள்ள மூதாட்டி ராஜேஸ்வரியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த அரிசியை சாப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குட்டி யானையும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில், குமார் தனது மனைவி மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள பழனிச்சாமி வீட்டிற்குள் சென்று உயிர் தப்பினார். யானை கதவை உடைத்து தள்ளியதில் குமாரின் கையில் எழும் முறிவும் தங்கமணிக்கு காலில் காயமும் ஏற்பட்டது. மற்றொரு வீட்டில் இருந்த மூதாட்டி வெளியே சென்றிருந்த நிலையில் அவரும் உயிர் தப்பினார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் குமார் மற்றும் தங்கமணியை அழைத்துக் கொண்டு தாலி ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று முதல் உதவி அளித்தனர். பின்னர் அங்கு வந்து இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ”நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பயிர் சேதம் ஒரு பக்கம் இருந்தாலும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும் நிலையில், தற்போது இரண்டு யானைகள் உள்ளன தாய் மற்றும் அதன் உடன் வரும் குட்டி யானை வீட்டை மட்டுமே குறிவைத்து அரிசியை தேடுகிறது. இதனால் வீட்டிற்குள் இருப்பவர்கள் யானைகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த இரண்டு யானைகளும் அரிசியை மட்டுமே சாப்பிட்டு பழகி உள்ளதால் நாள்தோறும் ஒவ்வொரு வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது.
இன்று அதிகாலை குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பி உள்ளனர். யானை கதவை உடைத்த நிலையில் உள்ளே சென்று இருந்தால், மூவரின் நிலை மோசமாகியிருக்கும். வனத்துறையினர் விவசாய பயிர்களை காப்பதோடு எங்களின் உயிர்களையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினால் மட்டுமே பொதுமக்கள் அச்சமின்றி வாழ முடியும். இல்லையென்றால் இரவு நேரத்தில் எந்த வீட்டிற்குள் புகும் என்ற அச்சத்திலேயே வாழ வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)