மான் கி பாத் புத்தகத்தில் இடம்பெற்ற கோவை லோகநாதன் ; குவியும் பாராட்டுகள்!
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் லோகநாதனின் சேவைகள் குறித்து விவரித்தத்துடன், அவரை பாராட்டி பேசினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட கோவையை சேர்ந்த லோகநாதன், தனது சேவைகள் மான் கி பாத் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன். 59 வயதான இவர், கடந்த 22 ஆண்டுகளாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தூய்மை பணியாளரான இவர், கழிவறைகளை சுத்தம் செய்வதவதன் மூலம் கிடைக்கும் தொகையை இப்பணிகளுக்காக செலவிட்டு வருகிறார். அதேபோல் பயன்படுத்தப்பட்ட உடைகளை தனது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இருந்து சேகரித்து, அவற்றை சலவை செய்து ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விருதுகளையும் லோகநாதன் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் லோகநாதனின் சேவைகள் குறித்து விவரித்தத்துடன், அவரை பாராட்டி பேசினார். இந்த நிலையில் லோகநாதனின் சேவைகள் குறித்து மனதின் குரல் புத்தகத்தில் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. லோகநாதனுக்கு இப்புத்தகத்தின் பிரதிகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், தன்னை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக மனதின் குரல் புத்தகத்தில் தனது சேவைகளை விவரித்து வெளியிட்டிருப்பது சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகத்திற்காக பாடுபடுபவர்களை மென்மேலும் சேவை செய்ய ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தொடர்ந்து சமுதாயத்திற்கு சேவை செய்து வருபவர்களை அறிமுகம் செய்து பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.