பசுவின் மடியில் பசியாறும் ஆட்டுக் குட்டிகள்; கோவையில் ஒரு ஆச்சரிய நிகழ்வு..!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பசுமாட்டு மடியில் ஆட்டுக் குட்டிகள் பால் குடித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்கள் அனைத்திற்கும் தாய்ப்பால் என்பது முக்கியமானதாக உள்ளது. அது பசியை போக்குவதுடன் உடல் நலம் பேணவும் உதவியாக இருந்து வருகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் பொருந்தும். அதேசமயம் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள், கூட்டுக் குடும்பங்களில் உள்ள மற்ற தாய்மார்களிடம் பால் குடித்து வளரும் சம்பவங்களை பார்த்திருப்போம். அதேபோல தாய் ஆட்டிடம் பால் சுரக்காத நிலையில், ஆட்டுக்குட்டிகள் பசு மாட்டின் மடியில் பால் குடித்து பசியாறும் ஒரு ஆச்சரிய சம்பவம் கோவையில் நடந்து வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு நல்லியன் குட்டை புதூரை சேர்ந்தவர் குப்புசாமி. 38 வயதான இவர், விவசாயியாக இருந்து வருகிறார். குப்புசாமி தனது வீட்டில் 7 மாடுகள் மற்றும் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு குப்புசாமி வளர்த்து வந்த ஒரு ஆடு 4 குட்டிகளை ஈன்றது. ஆனால் அந்த ஆட்டிற்கு போதிய பால் சுரக்காததால், 4 ஆட்டுக் குட்டிகளுக்கும் குப்புசாமி பசும்பாலை புட்டியில் அடைத்து கொடுத்து வந்தார்.
இதையடுத்து அந்த ஆட்டுக் குட்டிகள் மாட்டின் பாலை குடித்து வளர்ந்தன. இந்நிலையில் ஆட்டுக் குட்டிகள் தற்போது நல்ல நிலையில் நடப்பதால், நான்கு ஆட்டுக் குட்டிகளும் காலை மற்றும் மாலை நேரங்களில் பசுமாடுவிடம் சென்று பால் குடித்து வருகின்றன. ஆட்டுக் குட்டிகள் பசிக்கும் போது தானாகச் சென்று குப்புசாமி வளர்த்து வரும், செவலை பசுமாடுவிடம் சென்று அதன் மடியில் பாலை குடித்துப் பசியை தீர்த்து வருகின்றன. பசு மாடும் ஆட்டுக் குட்டிகளை விரட்டியடிக்காமல் ஆட்டுக் குட்டிகளை தான் ஈன்ற கன்றுக்குட்டிகள் போல அரவணைத்து பால் கொடுத்து வருகிறது. குப்புசாமி வளர்க்கும் 7 மாடுகளில் இந்த செவலை பசு மாடு மட்டும் தாய் உள்ளத்துடன் ஆட்டுக் குட்டிகளுக்கு பாலைக் கொடுத்து அதன் பசியை போக்குவதை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி குப்புசாமி கூறுகையில், “தாய் ஆட்டிடம் பால் சுரக்காத நிலையில் ஆட்டுக் குட்டிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் பசும்பால் கொடுத்தேன். பின்னர் ஆட்டுக் குட்டிகள் நடக்க ஆரம்பித்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அவைகளாகவே சென்று பசுமாட்டின் பாலை குடித்து பசியை தீர்த்து கொள்கின்றனர். ஆட்டுக்குட்டிகள் பால் குடுத்த பின்னரே மீதி இருக்கும் பாலை கரந்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்