கோவையில் யானைகளால் தொடர் பயிர் சேதம்; வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்..!
பயிர் சேதங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கவில்லை. வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை குறைக்க ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத வனத்துறையினரை கண்டித்து, அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டும் வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக கிராமப் பகுதிக்குள் சுற்றி வருகின்றன.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேவராயபுரம், நரசிபுரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தொடர்ந்து, இரவு நேரங்களில் கிராமப்பகுதிகளுக்குள் நுழைந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கவில்லை எனவும், வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை குறைக்க ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ”மாலை நேரம் ஆனவுடன் வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர் சேதம் செய்கிறது. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களை அடியோடு சாய்த்து விடுகின்றன. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் ஒன்றினைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்