பாசி நிதி நிறுவன ரூ.930 கோடி மோசடி வழக்கு - இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ. 171 கோடி அபராதம்
52 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பாசி நிதி நிறுவனம் 930கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, ஏராளமான முதலீட்டாளர்கள் பணம் முதலீடு செய்தனர். ஆனால் முறையாக வட்டி தராமல் பொதுமக்களிடம் இருந்து 930 கோடிரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் அதிகப்படியான நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட இந்த வழக்கு, அப்போது தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) வழக்கு நடந்து வந்தது. கடந்த 2013ம் ஆண்டில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 9 ஆண்டுகள் சாட்சி விசாரணை நடந்து வந்த நிலையில், அரசு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இருதரப்பு வாதம் முடிவடைந்தது. இதனிடையே முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க உள்ளதால், தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்நிலையில் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிபதி ரவி இன்று தீர்ப்பு வழங்கினார். கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில் மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அந்நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்ராஜ் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
அப்போது முதலீட்டாளர்களுக்கு ஒராண்டிற்குள் பணத்தை வட்டியுடன் திரும்ப தருவதாக மோகன்ராஜ் நீதிபதியிடம் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி ரவி இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 171 கோடியே 74 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்ந்த 1402 பேருக்கு இந்தப் பணத்தை தர நீதிபதி உத்தரவிட்டார். பாசி நிதி நிறுவன வழக்கை முறையாக விசாரிக்காத சிபிஐ போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இது குறித்து அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி 8.7 கோடி ரூபாய் பணம் முதலீடு செய்தேன். ஆனால் முறையாக பணம் திரும்பத் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து நலச்சங்கம் துவங்கி வழக்கை நடத்தி வந்தோம். இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை. வழக்கு விசாரணை தாமதம் அடைந்ததற்கு காரணம் சிபிஐ தான். இன்று நீதிபதி அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது”எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்