’கோவை மாநகராட்சியில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை’ - மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பேட்டி
"மாநகராட்சி பகுதிகளில் 1290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.அங்கு கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது"
கோவை மாநகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகராட்சியில் தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க ஒரு மண்டலத்திற்கு 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 15,61,819 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் 1290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி தேர்தலில் 6192 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 1548 கண்ட்ரோல் யூனிட் மற்றும் 3612 வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தபட உள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை அரசியல் கட்சிகள், பொதுமக்கள் புகாரளிக்க 0422-2300132 என்ற எண்ணுக்கு அழைத்து அளிக்கலாம். தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட 31ம் தேதி சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. கோவை மாநகராட்சியில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 85 ஆயிரம் செலவு செய்யலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு முறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிகைகள் குறித்தும் பல்வேறு தேர்தல் கட்டுப்பாடுகள் மற்றும் தேர்தல் நெறிமுறைகள் குறித்தும் கோவை மாநகராட்சி ஆணயாளர் ராஜகோபால் சுன்கரா எடுத்துரைத்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் மேற்பார்வையாளர் விரைவில் நியமிக்கப்படுவார். நேற்று காணோளி மூலம் நடந்தப்பட்ட கலந்துரையாடலில் கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிகைகள் குறித்து தெளிவுரை வழங்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் 2 வாகனங்களுடன் மட்டுமே மையங்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவர். ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கபடுவார். ஒருவருக்கு பின் ஒருவராகவே அனுமதிக்கப்படுவார்கள்.
ஜனவரி 31 ஆம் தேதி வரை பிரச்சாரங்கள் மற்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கபட்டுள்ளது. தேர்தலில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை முறைகளை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை உயர் நீதிமன்றம் தீவிரமாகக் கவனித்து வருகிறது என்பதை கவனத்தில் கொண்டு தேர்தலை நாம் நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்