ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை!
கோவை கணபதி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சேகர் இல்லத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் பிடிப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பணம் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என சொல்லப்பட்ட நிலையில், அது கட்சிப் பணம் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் கோவை கணபதி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சேகர் இல்லத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக விசாரிக்க நேற்று சிபிசிஐடி சார்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால், அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை வர முடியாது. பத்து நாட்கள் அவகாசம் தேவை என சிபிசிஐடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. சிபிசிஐடி ஏற்றுக் கொண்டிருந்தனர். நான் வெளியூருக்கு கிளம்பி கொண்டு இருந்த நேரத்தில் திடீரென சிபிசிஐடி போலீசார் வந்தார்கள். நோட்டீஸ் கொடுக்காமல் விசாரிக்க வந்தனர். அவர்களை வரவேற்று அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். தகவல் சொல்லாமல், பத்து நாள் அவகாசம் கேட்ட பின்னரும் கூட வந்தார்கள். சட்டபூர்வமாக அவர்கள் கேட்ட கேள்விக்கு மரியாதை கொடுத்து பதில் அளித்தேன். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக, பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, காவல் துறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
களங்கப்படுத்த முயற்சி
இந்த விவகாரத்தில் விசாரணை கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். அதற்கான உத்தரவு நாளை வந்துவிடும். அதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பாஜக மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. மடியில் கனம் இல்லை.ஆனால் அரசின் நோக்கம் துன்புறுத்துதல், பரபரப்பை ஏற்படுத்துவதுதான். சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையில் சென்னையில் இருந்து போலீசார் வந்திருந்தார்கள். கேள்விகள் கேட்டார்கள். சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டது. நேற்று பிற்பகல் ஒன்றேகால் மணிக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். இன்று கிளம்பி கொண்டு இருந்த பொழுது போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து நிற்கின்றனர். சட்டத்துக்கு புறம்பாக, எதிராக தகவல் தெரிவிக்காமல் வருகின்றனர். அரசின் நோக்கம் பா.ஜ.கவை களங்கப்படுத்த வேண்டும் என்பதுதான்.
நான்கு கோடி ரூபாய் பணத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை சொல்லிவிட்டோம். உண்மையான தகவல்களை விசாரணை அதிகாரியிடம் சொல்லிவிட்டோம். கடந்த ஒரு வாரமாக நான்கு கோடி ரூபாய் பாஜகவின் பணம் என தவறாக சித்தரித்து வருகின்றனர். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்கிறோம். உள்நோக்கம் மட்டுமே போலீஸ் விசாரணைக்கு காரணம். திமுக அரசு பாஜகவை களங்கப்படுத்து வதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.அது மிகப்பெரிய அளவில் தோல்வியையும், அவமானத்தையும் சந்திக்கும்.தவறான புகாரை சொல்கின்றனர். இன்று காலை 9 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீசார் 11 மணி வரை 2 மணி நேரம் விசரணை மேற்கொண்டனர் சென்னை சிபிசிஐடியில் இருந்து ஆறு பேர், உள்ளூரில் இருந்து ஆறு பேர் மற்றும் காவலர்கள் என இருபதுக்கு மேற்பட்ட போலீசார் 3 வாகனங்களில் வந்திருந்தனர்” என தெரிவித்தார்.