துணிவு, வாரிசு திரைப்படங்களை திரையிட்ட 6 தியேட்டர்கள் மீது வழக்குப்பதிவு - எதற்காக தெரியுமா?
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அதிகாலையில் திரையிட வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியும், திரையரங்க மேலாளர்கள் அதனை மீறி அதிகாலையில் திரையிட்டதால் அதிகளவிலான கூட்டம் கூடியது.
கோவையில் காவல் துறையினர் அறிவுறுத்தலை மீறி துணிவு, வாரிசு திரைப்படங்களை அதிகாலையில் திரையிட்ட 6 திரையரங்க மேலாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துணிவு, வாரிசு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 ம் தேதி இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் பொங்கல் வெளியீடாக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
ரசிகர்கள் கூட்டம்:
இதேபோல் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படமும் இன்று வெளியானது. வாரிசு படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் படம் வெளியாவதற்கு முந்தைய நாளே தியேட்டர்களை ஆக்கிரமிக்க தொடங்கினர். இரண்டு படங்களும் வெளியானது முதல் இப்படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் வெளியான இப்படங்களுக்கு திரையரங்கங்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதேசமயம் இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனிடையே கோவையில் வாரிசு, துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகின. துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி 1 மணிக்கும், வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி 4 மணிக்கும் திரையிடப்பட்டது. இந்நிலையில் வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்களை திரையிட்ட 6 திரையரங்குகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை:
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள குமரன் திரையரங்கம், காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள கற்பகம் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் யாமுனா திரையரங்கம், பந்தயசாலை பகுதியில் உள்ள கே.ஜி. திரையரங்கம், ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கம், பீளமேடு பகுதியில் உள்ள காஸ்மோ திரையரங்கம் மற்றும் பந்தயசாலை கே.ஜி. திரையரங்கில் ஸ்கிரின் 2 தனம் திரையரங்கம் ஆகிய திரையரங்குகளின் மேலாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 11 ம் தேதி அஜித்குமார் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அதிகாலையில் திரையிட வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியும், திரையரங்க மேலாளர்கள் அதனை மீறி அதிகாலையில் திரையிட்டதால் அதிகளவிலான கூட்டம் கூடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்