’அப்போ 5 ஆயிரம் தரச்சொன்னாங்க.. பொங்கல் தொகுப்பல்ல, பொய் தொகுப்பு’ - அண்ணாமலை குற்றச்சாட்டு
"திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன பனைவெல்லம் கொடுக்கவில்லை. எதிர்கட்சியாக இருக்கும்போது 5 ஆயிரம் கொடுக்க சொன்னார்கள். இது பொங்கல் தொகுப்பு அல்ல, பொய் தொகுப்பு."
கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்த்தின் சார்பில் மாணவர்களுக்கான மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைப்பதாக சொல்லப்பட்டது. திமுகவில் பொருளாதார நிபுணர்கள் உள்ளனர். முழுவதுமாக பொருளாதார நிலை அறிந்தே ஆட்சிக்கு வந்தார்கள். திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை செய்யவில்லை. ஆனால் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சொல்லாமல் விலை குறைப்பு செய்துள்ளார்கள். திமுக ஏன் செய்யவில்லை என மக்கள் கேட்கிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வரும் போது 67 சதவீத மக்களிடம் மட்டுமே சிலிண்டர் கேஸ் இருந்தது. தற்போது 97.3 % மக்களிடம் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்தியாவில் சிலிண்டர் கேஸ் இல்லை என்பதால், இறக்குமதி செய்கிறோம். இரண்டு மடங்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலை உள்ள இடத்தில் இருந்து வாங்கி கொடுத்து, மத்திய அரசு மக்களுக்கு பாதுகாவலான உள்ளது. உலகம் முழுவதும் பிரச்சனை உள்ளது. செயற்கை தட்டுப்பாடு செய்ய வேண்டாம் என ஐ.நா.விடம் இந்தியா சொல்லியுள்ளது. குண்டு சட்டிக்குள் திமுக அரசியல் செய்கிறது. இதில் புதிதாக வம்புக்கு இழுக்கும் வகையில் பாஜக பேசவில்லை. இதை அமைச்சர்கள் உணர்ந்து கொள்ளாத வரை தமிழக அரசியலில் கஷ்டம் தான்.
பொய் சொல்வதில் போட்டி வைத்தால் திமுக அமைச்சர்கள் முதலிடத்திற்கு வருவார்கள். நெம்பர் 1 நாடு, முதல்வர் என்பது எல்லாம் பொய் சொல்வதில் தான். மக்களிடம் அதிக பொய் சொல்லும் கட்சி திமுக. மின்சார விலையை உயர்த்துமாறு மத்திய அரசு சொன்ன ஒரு கடிதத்தை காட்டுங்கள். யாரும், யாரையும் விலையேற்ற சொல்லவில்லை. காற்றாலை மின் உற்பத்தி கைகொடுப்பதால் தமிழகம், நிலக்கரியை மட்டும் நம்பியிருக்க வேண்டியதில்லை. ஆனால் தனியார் நிறுவனம் பயன்படும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறார்கள். காற்றாலை மின்சாரத்தில் ஒரு மெகா வாட்க்கு 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்கிறார்கள். பெயர் மாற்றத்துக்கு 10 இலட்சம் இலஞ்சம் கேட்கிறார்கள். இப்படி பிடுங்கி கொண்டிருந்தால் புதிய தொழிலதிபர்கள் எப்படி வந்து விண்ட் மில் போடுவார்கள்?
மின்சார விலையேற்றம் என்பது அபத்தம். காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்களை கம்பேர் பண்ணாதீர்கள். ரூப் டாப் சோலார் மின்சாரம் ஒரு கிலோ வாட்க்கு 5 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்கிறார்கள். தமிழக அரசு 3500 மெகாவாட் ரூப் டாப் சோலார் மின்சாரம் போடுவோம் என எழுத்துபூர்வமாக சொல்லியுள்ளார்கள். ஆனால் 300 மெகாவாட் கூட தமிழகத்தில் இல்லை. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுங்கள். பொய்யைச் சொல்ல சிலர் கோவைக்கு கிளம்பி வருகிறார்கள்.
ராகுல் காந்தி நடைபயணம் என்பது எண்டர்டெயிண்மண்ட். இது இந்திய ஒற்றுமை நடைபயணம் அல்ல. இந்தியாவை பிரிக்கக்கூடிய பயணம். ராகுல் காந்தி கடுமையாக நடந்து ஓடினால் கூட, அது அவருக்கு நல்ல உடற்பயிற்சி. ஆனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மத்திய அரசு உணவு திட்டத்தை 2023 டிசம்பர் வரை நீட்டித்துள்ளார்கள். 2 இலட்சம் கோடி செலவில் 83 கோடி மக்கள் பயன்பட உள்ளார்கள். இதையாவது தமிழக அரசு மக்களுக்கு உருப்படியாக கொடுக்க வேண்டும்
பொங்கல் தொகுப்பில் கடந்தாண்டு கரும்பு கொடுத்தார்கள். இந்தாண்டு கரும்பு கொடுக்கவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன பனைவெல்லம் கொடுக்கவில்லை. எதிர்கட்சியாக இருக்கும் போது 5 ஆயிரம் கொடுக்க சொன்னார்கள். இது பொங்கல் தொகுப்பு அல்ல, பொய் தொகுப்பு. சர்க்கரை கொடுத்தால் மக்கள் சக்கரை பொங்கல் செய்வார்கள் என அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருப்பது அபத்தமான கருத்து. மக்களது கோபத்திற்கு மேலும் மேலும் ஆளாகி கொள்கிறார்கள். பொய்களை மட்டும் சொல்லி கொண்டிருக்கும் திமுகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்டார் பார்ப்போம். உத்தவ் தாக்ரே அமைச்சராகியது என்ன ஆனது என்று பாருங்கள்” எனத் தெரிவித்தார்.