‘எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா?’ - அண்ணாமலையின் ரியாக்சன் என்ன?
எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டி.ஆர். பாலு ஆளுநரை ஏக வசனத்தில் ஒருமையில் திட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியமான தலைவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட்டனர். தென் தமிழகத்தில் குருபூஜைகளுக்கு செல்வது வார் ஜோனுக்குள் செல்வது போல, இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வது போல உள்ளது. ஆளுநரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது. திமுக சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தது என வெள்ளை அறிக்கை தர வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்த ஊரில் பேருந்து நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைக்கின்றனர்.
மக்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் கட்டுவது பெரிய விஷயம் அல்ல. இது சாதனை அல்ல. ஆளுநரை டி.ஆர். பாலு ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். டி.ஆர். பாலுவிற்கு திட்டுவது மட்டுமே முழு நேர வேலை. ஆளுநரை வம்பிற்கு இழுக்கும் போக்கை திமுகவினர் விட்டு விட வேண்டும். ஆளுநர் தனது வேலையை செய்கிறார். ஆளுநரை ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி என டி.ஆர். கொச்சைபடுத்த முயற்சிக்கிறார். டி.ஆர். பாலு எம்.பி. சீட் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் பேசுகிறார்.
பாரதியார் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை. பாரதியாரை திமுகவினர் பலகாலம் ஏற்று கொள்ளவில்லை. பாரதியாரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தனர். பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள். வாரணாசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீடு பெட்டி கடை மாதிரி இருக்கிறது. முதலமைச்சர் பாரதியார் பற்றி டிராமா போடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
காந்தியை அதிகமாக தூக்கி பிடிப்பவர்கள் நாங்கள் தான். கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்கவில்லை. கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்க கூடாது. வீரலட்சுமி யார் என எனக்கு தெரியாது. யார் வேண்டுமானாலும் ஊழல் பட்டியலை வெளியிடலாம். நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்க்கு செல்ல வேண்டும். 50 இலட்சம் கையெழுத்து வாங்குவதால் என்ன நடக்க போகிறது? ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் திமுகவினால், 50 இலட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை திமுக கட்சியை இழுத்து மூடி விடலாம். நீட் தேர்வை அனைவரும் ஏற்று கொண்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சங்கரய்யா முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர கவர்னர் மறுக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து தொடர்பான கேள்விக்கு, சிரிப்பு தான் எனது பதில் என சிரித்தபடி பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம். உதயநிதி ஸ்டாலின் சினிமா சூட்டிங் போனது போல, இப்போதும் போகிறார். நீட் தற்கொலைக்கு முதல் குற்றவாளி ஸ்டாலின், இரண்டாவது குற்றவாளி உதயநிதி ஸ்டாலின். காவல்துறை நடுநிலை இழந்து விட்டது.
உதயநிதி ஸ்டாலின் தான் ஜீரோ என காட்டுவதற்காக தான் முட்டையை கையில் எடுத்துள்ளார். அவர் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்கிறார். தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும். பாஜகவில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார். ஆரியம், திராவிடம் என்பது ஒரு குப்பை. அதற்கு சரியான இடம் குப்பை தொட்டி தான். திராவிடம் என்பது என்ன என திமுகவினருக்கே தெரியாது. அது முட்டாள்தனமான பொய்யான வாதம். திராவிட மாடல் என முதல்வர் ஊரை ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
யார் ஆரியர்? இந்தியாவில் யாரும் ஆரியர் இல்லை. இண்டி கூட்டணியில் உள்ளவர்கள் ஆரியரா? ஆரியர் எதிரி என்றால், இண்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியே வர வேண்டும். நடிகை கெளதமியை நேற்று சந்தித்தேன். அவர் எனக்கு நண்பர். பிரச்சனை எதுவும் இல்லை. அவரது வழக்கை திமுக அரசு கையில் எடுக்க வேண்டும். கட்சி சார்பில் அவரது மனக்குமுறலை கேட்டேன். அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் செய்வேன். மற்ற கட்சி பற்றி கமெண்ட் பண்ண மாட்டேன். அது எனக்கு நேர விரயம். நான் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர். நான் யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது முக்கியம். அதனால் கேள்வி கேட்பவர்களுக்கு தகுதி இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கு திமுகவும், ஸ்டாலினும் தான் காரணம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்த பிறகு, உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.