‘நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்
”ஆறுகள் இயற்கை கொடுத்த வரங்கள். அதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்று நீரை அள்ளி குடிக்கலாம். மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யலை பாதுகாத்தார்கள்.”
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பசுமைத் தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும். கொங்கு செழிக்க நொய்யல் செழிக்க வேண்டும். அந்த நிலை தற்போது இல்லை. நொய்யல் ஆற்றை கெடுக்க நாம் தான் காரணம். தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆறான காவிரி ஆறு, 5 கோடி மக்கள் குடிக்கவும், விவசாயத்திற்கும் நீர் தருகிறது.
ஆறுகள் இயற்கை கொடுத்த வரங்கள். அதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்று நீரை அள்ளி குடிக்கலாம். மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யலை பாதுகாத்தார்கள். பொங்கலில் இவர் படமா, அவர் படமா என விவாதம் நடக்கிறது. தமிழக மக்கள் டிஎன்ஏவில் சினிமா ஊறியுள்ளது. சினிமாவில் இல்லாததால் நாங்கள் அரசியலில் வர கஷ்டப்படுகிறோம். ஒரு இலட்சம் கோடி ரூபாய் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்த 42 ஆயிரம் ஏரிகள், மக்கள் ஆட்சிக்காலத்தில் 37 ஆயிரமாக குறைந்து விட்டது. புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. உலகை மாசுபடுத்தும் பெரிய வில்லன் அமெரிக்கா. புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கூவம் ஆறு என்றால் நாம் மூக்கை பிடிப்போம். கூவத்தின் முதல் 60 கி.மீ. தூரத்தில் ஆற்று தண்ணீர் குடிக்கலாம். விவசாயம் செய்யலாம். சென்னைக்குள் வரும் போது தான், கூவம் சாக்கடையாக மாறுகிறது. பல ஆயிரம் கோடி செலவு செய்தாலும் சாக்கடையாக தான் உள்ளது.
நொய்யல் ஆறு உருவாகும் இடத்தில் நன்றாக உள்ளது. நொய்யல் ஆறு சாமாளபுரம் முதல் உரத்துபாளையம் வரை 90 சதவீதம் மாசு அடைகிறது. அடையாளத்திற்கு அரசியல் செய்பவன் நான் இல்லை. விளம்பரத்திற்கு அரசியல் செய்வது கிடையாது. உணர்வுபூர்வமாக அரசியல் செய்கிறேன். சுகாதார துறை அமைச்சராக இருந்த போது தனியாக போராடி எதிர்ப்பை மீறி பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து சட்டம் கொண்டு வந்தேன். யானை, புலி ஊருக்குள் வரவில்லை. அவை இருக்கும் இடத்தில் தான் வீடு கட்டியுள்ளோம். நாம் தான் காடுகளை ஆக்கிரமித்துள்ளோம்.
கோவையின் திடக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் ஒரே கையெழுத்தில் நொய்யலை காக்க நடவடிக்கை எடுத்திருப்பேன். அதிகாரம் என்னிடம் இல்லையென்றாலும், நாம் சேர்ந்து குரல் கொடுத்தால் நடக்கும். என்னை பார்த்து மற்ற அரசியல் கட்சிகளும் நொய்யலை காக்க வர வேண்டும். நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை, இராசயன கழிவு, சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். நொய்யல் மீட்டெடுப்பை கூட்டு முயற்சியால் செய்ய முடியும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நொய்யலை மீட்டெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், ”மாசு அடைந்து வரும் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நொய்யலை காப்பற்ற வேண்டும். கோவை மாநகரத்திற்கு வந்த பிறகே, நொய்யலின் மாசு துவங்குகிறது. தொழிற்சாலை கழிவுகள், திடக்கழிவுகள், சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. 32 அணை, 43 குளங்கள் சோழர்கள் நொய்யல் ஆற்றில் கட்டினார்கள். தற்போது 19 குளங்கள் தான் இருக்கிறது. நொய்யல் ஆறு ஐ.சி.யூ.வில் இருக்கிறது.
கழிவுகள், செங்கல் சூளை, மணல் கொள்ளையால் கடந்த 40 ஆண்டுகளில் ஆற்றை நாசப்படுத்தி விட்டார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் நொய்யலை மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நொய்யலை புனரமைக்க கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கிய நிதி எங்கே சென்றது எனத் தெரியவில்லை. இந்த ஆற்றின் கழிவுகள் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இந்த கழிவு சென்னை மக்களையும் பாதிக்கிறது. நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை பாதுகாக்க நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தமிழ்நாடு அரசு நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும். குடிமராமரத்து திட்டத்தில் வெறும் 10 சதவீத வேலை மட்டுமே நடந்தது. 90 சதவீத பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள். கோவையில் செங்கல் சூளைகளுக்காக காடுகளை காலி செய்து விட்டார்கள். நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூங்கி கொண்டிருக்கிறதா?
மனசாட்சி இல்லாத ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் ஊடகங்கள் விஜய், அஜித் படங்களை பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். 5 அடி கருப்பையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு உடந்தையாக உள்ளது. என்.எல்.சி.யை தனியார் மயமாக்க உள்ள நிலையில், 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஏன் கையகப்படுத்த வேண்டும்?
தமிழ்நாடு அரசிற்கு 6 இலட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி கடன் உள்ளது. ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு வட்டியாக செலுத்துகிறார்கள். ஓடாத மிக்சி, கிரைண்டர்க்கு கடன் வாங்கினார்கள். மக்கள் திட்டங்களுக்காக கடன் வாங்குவது தவறில்லை. அடுத்த கட்டமாக நொய்யலை மீட்க நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.