’கொட்டும் வானம். ஒழுகும் கூரை’ - சேதமடைந்த வீடுகளால் தவிக்கும் ஆனைமலை பழங்குடிகள்..!
வனத்துறை சுற்றுலா பயணிகளுக்காக வீடு கட்டுகிறார்கள். மின்சார வசதி தருகிறார்கள். ஆனால் காலம்காலமாக வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடு, மின்சார வசதி இல்லை.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலைப் பகுதியில் மலை மற்றும் சமவெளிப் பகுதிகளில் கணிசமான அளவு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பல பழங்குடியின கிராமங்களில் சாலை வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பழங்குடியின மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் பழங்குடியின மக்களுக்கு கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் தென்மேற்கு பருவமழைக்காலமான தற்போது, பழங்குடியின மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தம்மம்பதி என்ற பழங்குடியின கிராமத்தில், மழை காரணமாக வீடுகள் சேதமடைந்து மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன.
இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த அம்சா கூறுகையில், “தம்மம்பதியில 40 வீடுகள் இருக்குங்க. கட்டி 35 வருசத்துக்கு மேல ஆச்சு. அந்த வீடுக புல்லா டேமேஜ் ஆயிடுச்சுங்க. மழைக் காலத்துல இடிஞ்சு இடிஞ்சு மேற்கூரை விழுந்து விழுந்து கம்பி எல்லா தெரியுது. ஓதம் எடுத்திட்டு தண்ணீ ஓழுகிட்டு இருக்குங்க. தூங்க முடியாம சிரமப்படுறோம். மழையில எப்போ வேணா இடிஞ்சு விழலாம். மழைக்காலம் வந்தாலே பயம் வந்திடுது. மேற்கூரை சரி பண்ணிக் கொடுத்தா நல்லா இருக்குங்க. பல முறை புகார் கொடுத்தோம். யாரும் எங்கள கண்டுக்கல. சேதமடைந்த வீடுகளை புதுப்பிச்சு தரணும். புதிய ஆட்சியிலயாவது எங்களுக்கு வீட்டு வசதி செய்து தரணும்னு எதிர்பார்க்குறோம்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் பரமசிவம் கூறுகையில், “ஆனைமலை வட்டத்தில் பழங்குடியினர் கொத்தடிமை மறுவாழ்வு திட்டம் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகள் மழைக்காலமான தற்போது, சேதமடைந்து மேற்கூரைகள் இடிந்து விழுந்து வருகின்றன. சில வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பல செட்டில்மெண்ட்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதன் காரணமாக பழங்குடிகள் மீண்டும் தனியார் தோட்டங்களுக்கு பண்ணை அடிமைகளாக செல்லும் நிலை உள்ளது. வீடுகளின் மேற்கூரைகள் அவ்வப்போது மழையில் இடிந்து விழுந்து வருகின்றன. இதனால் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்பட்டு, மக்களுக்கு காயம் ஏற்படுகிறது. பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன், இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அண்ணா நகர், தம்மம்பதி, புளியண்கண்டி, பூச்சநாரி, சுந்தரபுரி ஆகிய பழங்குடியின கிராமங்களில் உள்ள சுமார் 300 வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. வழக்கமாக பழங்குடியின மக்களுக்கு மழைக் காலங்களில் வேலைவாய்ப்பு இருக்காது. இந்த நிலையில் கொரோனா காரணமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். வாழ்விடங்களில் மிகுந்த சிரமத்துடன் வசித்து வருகின்றனர். கிராமங்கள் முழுவதும் சேறும், சகதியுமாக சுகாதாரம் இல்லாமல் உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த மே மாதம் மழையால் சேதமடைந்த பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு அரசு இதுவரை உதவி செய்யவில்லை. சில தன்னார்வலர்கள் தான் உதவி செய்தனர். ஆழியார், அட்டக்கட்டி பகுதியில் வனத்துறை சுற்றுலா பயணிகளுக்காக வீடு கட்டுகிறார்கள். மின்சார வசதி தருகிறார்கள். ஆனால் காலங்காலமாக வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடு, மின்சார வசதி இல்லை. திமுக அரசு அக்கறையுடன் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.