சொகுசு காருடன் போட்டிபோடும் 'அமால் டுமால்' ஆட்டோ; இதில் இத்தனை வசதிகளா?
போலியோ நோயால் இடது காலின் செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்ட போதும், கார் ஓட்ட வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற பல யோசனைகள் செய்துள்ளார். அதில் ஒன்று தான் 'அமால் டுமால்' ஆட்டோ.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார் மாற்றுத்திறனாளி ரா.அருண். 46 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு பைப்புகள் மற்றும் கனரக பொருட்களை ஏற்றிச் செல்லும் லோடு ஆட்டோவை இயக்கி, வருமானம் ஈட்டி வருகிறார். இவருக்கு 5 வயதில் போலியோ நோயால் இடது காலின் செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்ட போதும், கார் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. அந்த ஆசையை நிறைவேற்ற பல யோசனைகள் செய்துள்ளார். அதில் ஒன்று தான் 'அமால் டுமால்' ஆட்டோ.
'அமால் டுமால்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆட்டோவில், சொகுசு காரில் உள்ள முக்கிய வசதிகளான சொகுசான இருக்கைகள், ஏர் கூலர் ஃபேன், எல்சிடி தொடு திரை, ஸ்பீக்கர்கள், கேமரா, எல்இடி விளக்குகள், தானியங்கி கதவுகள், பவர் விண்டோ, ஹேண்ட் ப்ரேக் என நவீன வசதிகள் அனைத்தும் இந்த ஆட்டோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருண் கூறுகையில், “குடும்ப வறுமை காரணமாக போலியோ பாதிப்பிற்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள முடியவில்லை. பள்ளி படிப்பையும் தொடர முடியாத சூழல். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பல்வேறு வேலைகளை செய்தோம். ஒருகட்டத்தில் நானும் லோடு ஆட்டோ ஓட்டத் துவங்கினேன். மனைவி, குழந்தைகள் மற்றும் தம்பியின் குடும்பம் என கூட்டுக் குடும்பமாக நாங்கள் வசித்து வருகின்றோம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வெளியே கூட்டிச் செல்ல ஒரு வாகனம் தேவைப்பட்டது. பைக்கில் இருவருக்கு மேல் பயணிக்க முடியாது. சொந்தமாக ஒரு கார் வாங்கி, குடும்பத்தினரை அதில் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. சிறு வயது முதல் கார் ஓட்டுவதில் எனக்கு ஆர்வமும் ஆசையும் அதிகம். ஆனால், நான் மாற்றுத்திறனாளி என்பதால் கார் ஓட்டுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது. ஆனால், குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்ல ஒரு வாகனம் கட்டாயம் வேண்டும் என தெரிந்தது.
காருக்கு பதிலாக வேறு என்னென்ன வாகனங்கள் இருக்கின்றன. அவற்றில் எதையெல்லாம் நம்மால் இயக்க முடியும் என ஆராயத் தொடங்கினேன். அப்போது தான், 'கார் ஓட்ட முடியாமல் போனால் என்ன, நம்மால் தான் ஆட்டோ ஓட்ட முடியுமே' எனத் தோன்றியது. மூன்று சக்கர வாகனமான ஆட்டோவை இயக்க இரு கைகள் மற்றும் ஒரு கால் போதுமானவை. எனவே, ஒரு ஆட்டோவையே கார் போல மாற்றும் யோசனை வந்தது. சொகுசு காரில் உள்ள அனைத்து வசதிகளும் அந்த ஆட்டோவில் இருக்க வேண்டும் என நினைத்தேன். என்னிடம் இருந்த ஆட்டோவையே இதற்கு பயன்படுத்த முடிவு செய்தேன். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கார் மற்றும் ஆட்டோ மறுவடிவமைப்பு குறித்து யூடியூபில் தகவல்களை திரட்ட ஆரம்பித்தேன். வாகனங்களை மறுவடிவமைப்பு செய்யும் நிறுவனங்களிடம் பேசினேன். கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன மறுவடிவமைப்பு செய்யும் நபரிடம் தொடர்பு கொண்டு, எனது ஆசையையும், உடல் ரீதியான பிரச்சனைகளையும் சொன்னேன். எனது தேவைகளை புரிந்து கொண்டு, எனக்காகவே ஆட்டோவை மறுவடிவமைப்பு செய்தார். இப்படித் தான் இந்த ஆட்டோ உருவானது.இந்த ஆட்டோவை உருவாக்க, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது. எனது ஆசையையும், நிலையையும் புரிந்து கொண்ட வாகன வடிவமைப்பாளர், கொடுத்த தொகைக்கும் அதிகமான தரத்தில் ஆட்டோவை உருவாக்கி தந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அருண், “காரில் உள்ளது போன்ற நவீன வசதிகள் கொண்ட இந்த ஆட்டோவில், எனது குடும்பத்தினரோடு வெளியே சென்று வருகிறேன். ஆரம்பத்தில், 'ஏன் இதற்காக இவ்வளவு செலவு செய்கிறீர்கள்?' என கேட்ட குடும்பத்தினர், இப்போது போட்டி போட்டுக்கொண்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்து பயணிக்கின்றனர். இடது கால் பாதிப்பால் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை தடைபட்டாலும், இந்த 'அமால் டுமால்' ஆட்டோ எனது ஆசைகளை நிறைவேற்றிவிட்டது” என தெரிவித்தார், புன்னகை ததும்பும் முகத்துடன். அருண் மாற்றுத் திறனாளி அல்ல, மாற்றும் திறனாளி.