’இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடக்க நாங்க தான் காரணம்’ - போட்டு உடைத்த அதிமுக செய்தித் தொடர்பாளர்
"நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இலஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம்."
கோவையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஒ.பன்னீர் செல்வத்தை கொச்சைப்படுத்தி பேசி வரும் கே.பி. முனுசாமியின் பேச்சைக் கண்டிக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் விரட்டி அடிக்கப்பட்டவர்தான் கே.பி.முனுசாமி. அவர் ஒ.பி.எஸ் உதவியால் தான் கட்சியில் இரண்டாம் நிலை பதவியில் இடம் வகிக்கிறார். கே.பி. முனுசாமி எங்கேயும் நிலையாக இருக்கமாட்டார். அவரை துரோகி என இ.பி.எஸ்ஸே சொல்லியுள்ளார்.
நல்ல மனிதராக இருந்தால், ஒ.பி.எஸ் உதவியால் வாங்கிய பதவியை கே.பி. முனுசாமி ராஜினமா செய்வாரா? அப்படி செய்துவிட்டு இ.பி.எஸ் இடம் பதவி வாங்கி செயல்படட்டும். விஸ்வாசம் மிக்க தொண்டர் ஒ.பி.எஸ். ஒ.பி.எஸ் பற்றி பேசுவதற்கு கே.பி முனுசாமிக்கும் சரி அவருடன் இருக்கும் யாருக்கு உரிமை கிடையாது. அருகதையும் கிடையாது. இலஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனையின்போது தொண்டர்களை, அடியாட்கள் போன்று வீட்டின் முன்பு குவிப்பதை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இ.பி.எஸ். பொதுச்செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்பதால் ஆயிரம் கோடி செலவு செய்தார். நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு மானம், சூடு, சொரணை இல்லாமல் கட்சியில் இருப்பது ஏன்? ஆயிரம் கோடி செலவு செய்தும் பதவி கிடைக்காத விரக்தியில் பேசி வருகின்றனர். இ.பி.எஸ். யாரை நம்பி வருகிறாரோ, அவர்கள் மூலம் பாதிப்பு வரும். அவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இ.பி.எஸ். கட்சியை அழித்த பெயருக்கு உரித்தவராக இருக்காதீர். அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர்கள் இ,பி.எஸ். அணியினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் கொள்ளையும், கொலையும் நடைபெற்றது. அதைப் பற்றி ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதய தெய்வம் வீட்டிற்கு ஏன் காவல் துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை?
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 9 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. கடந்த 4 1/2 வருடங்களில் செய்த தவறுகளை பட்டியலிட்டு வெளியிடுவோம். நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இலஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம். அதிமுக தலைமை அலுவலகத்தில் மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெறுகிறது
வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் அதிமுக கட்சியின் பணத்தை பாதுகப்பாக பார்த்துக்கொண்டவர் ஒ.பி.எஸ் தான். ஆனால் அவர்களிடம் இருந்திருந்தால் பணத்தை எல்லாம் தூக்கிட்டு போயிருப்பார்கள். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எந்த சமரசமும் செய்யவில்லை. நட்பு ரீதியாகவும் கட்சியை பார்த்துக்கொள்ள இருவரையும் சமரசம் செய்து வைத்தார் பிரதமர். யாரும், எந்த கட்சியும் சமரசம் செய்யும் அளவிற்கு அதிகமுகவினர் இல்லை. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு துரோகம் செய்யும் அளவிற்கு வந்து விட்டார். விரைவில் அதுவும் வெளிவரும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்