மலையின் விளிம்பில் சென்றபோது விபரீதம்.. தவறி விழுந்து இறந்த பெண் யானை.. பதைபதைக்கும் கிராம மக்கள்
கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள பகுதியில் மலையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள பகுதியான அட்டப்பாடி, அகலி, சைலெண்ட் வேலி பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த யானைகள் உணவிற்காகவும் வலசை செல்லவும் தமிழக - கேரள வனப்பகுதிக்குள் மாறி மாறி வருவது வழக்கம். இந்நிலையில் அட்டப்பாடி உள்ள மலைப் பகுதி வழியாக யானை கூட்டம் ஒன்று நேற்று இரவு வந்துள்ளது. அப்போது மலையின் விளிம்பில் யானை கூட்டம் சென்ற போது, கால் தவறி பெண் யானை ஒன்று மலை பாதையில் விழுந்தது. இதனால் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
பெண் யானை உயிரிழந்து கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அட்டப்பாடி வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை அங்கு சென்று வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் யானை கால் தவறி விழுந்து உயிரிழந்ததா அல்லது வேறு எதேனும் காரணமா என யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலையில் இருந்து யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாடு
கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் பகுதி அருகில் சகாரா சிட்டி என்ற இடத்தில் கடந்த 17 ம் தேதியன்று, ஒரு காட்டு மாடு நடமாடுவதாக பொதுமக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் 30 பேர் கொண்ட குழுவினர் நிகழ்விடத்திற்கு வந்து, காட்டு மாடு குறித்து விசாரித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து காட்டு மாடு விநாயகபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றது. அங்கு சென்ற வனத்துறையினர் அதனை பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காட்டு மாடு பன்னிமடை வனப்பகுதியில் இருந்து வழிதவறி கிராமப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே இரவு நேரத்தில் காட்டு மாடினை பின் தொடர்வதிலும், தொடர்ந்து கண்காணிப்பதும் கடும் சிரமங்கள் நிலவியது. சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி என காட்டு மாடு இடம் பெயர்ந்து சென்றது. காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியிலிருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்ற காரணத்தினால் அதனை பின்தொடர இயலாமல் சுற்றி வந்து தேடிய நிலையில் காட்டு மாடு வனத்துறையினர் கண்காணிப்பு வளையத்திலிருந்து விலகி சென்றது.
இந்நிலையில் 3 நாட்களாக கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டு மாடு, இன்று காலை சின்னியம்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. தனம் நகர் என்ற இடத்தில் புதர் மண்டிய பகுதியில் காட்டு மாடு நின்று கொண்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை வெளியே வர விடாமல் தடுக்க பொதுமக்கள் முயற்சித்து வருகின்றனர். காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்