கோவையில் பெயர் பலகையில் இருந்த சாதி பெயரை அழித்த திமுக பிரமுகர்.. பாஜக கண்டனம்
ஜிடி நாயுடு பெயரில் இருந்த சாதி பெயரை கருப்பு மை பூசி அழித்ததற்கு முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரகுநாத்தையும், திமுகவையும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
கோவை பந்தய சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். திமுக பிரமுகரான இவர், ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்ற பெயரில் சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 66 வார்டில் ஜி.டி. நாயுடு தெரு என்ற பெயர் பலகை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த சாதி பெயரை ரகுநாத் கருப்பு மை பூசி அழித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்நிலையில் ஜிடி நாயுடு பெயரில் இருந்த சாதி பெயரை கருப்பு மை பூசி அழித்ததற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரகுநாத்தையும், திமுகவையும் விமர்சித்து அவர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகள் ஒருவரான நமது கோவை பகுதியைச் சார்ந்த மதிப்பிற்குரிய திரு ஜி டி நாயுடு அவர்களின் திறமையான ஆற்றலுக்கு இலக்கு ஏற்படும் விதமாக திமுகவை சேர்ந்த நிர்வாகி ரகுநந்தன் என்பவர் மதிப்பிற்குரிய திரு ஜிடி நாயுடு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக1/3 pic.twitter.com/DHugI4xOIk
— Balaji Uthamaramasamy (@balaji_utham) January 13, 2024
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கோவை மாநகர பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, “தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகள் ஒருவரான நமது கோவை பகுதியைச் சார்ந்த மதிப்பிற்குரிய ஜி.டி நாயுடு அவர்களின் திறமையான ஆற்றலுக்கு இழுக்கு ஏற்படும் விதமாக திமுகவை சேர்ந்த நிர்வாகி ரகுநந்தன் என்பவர் மதிப்பிற்குரிய ஜிடி நாயுடு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் வைக்கப்பட்ட சாலைக்கு கருப்பு மை பூசி உள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அறிவியல் விஞ்ஞானி கோவைக்கு பெருமை சேர்த்த அவருக்கே இந்த நிலைமை என்றால் இந்த விடியா திமுக அரசால் மக்களின் நிலைமை என்ன? வன்மையாக கண்டிக்கின்றோம் உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கோவையின் தொழில்புரட்சிக்கு வித்திட்ட மிகச்சிறந்த அறிவியல் மேதை உயர்திரு ஜிடி.நாயுடு அவர்களின் புகழை மறைக்க திமுக முயற்சி செய்கிறது.
— Selva Kumar (@Selvakumar_IN) January 14, 2024
திமுக நிர்வாகி ரகுநந்தன் என்பவர் ஜிடி.நாயுடு தெரு என்று இருந்த பெயர் பலகையில் கருப்பு மை அடித்துள்ளார்.
இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது, மேலும் -… pic.twitter.com/NtnZPeuLes
இதேபோல பாஜக பிரமுகரான செல்வகுமார் தனது பதிவில், “கோவையின் தொழில்புரட்சிக்கு வித்திட்ட மிகச்சிறந்த அறிவியல் மேதை உயர்திரு ஜிடி.நாயுடு அவர்களின் புகழை மறைக்க திமுக முயற்சி செய்கிறது. திமுக நிர்வாகி ரகுநந்தன் என்பவர் ஜிடி.நாயுடு தெரு என்று இருந்த பெயர் பலகையில் கருப்பு மை அடித்துள்ளார். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது, மேலும் - மத்திய அரசின் MSME அமைச்சரவை ₹200 கோடி செலவில் கோவையில் நிர்மாணிக்க போகும் MSME Tooling Centreக்கு ஜிடி.நாயுடு அவர்களின் பெயரை வைக்க கோரிக்கை வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறுகையில், “சாதி பெயரோடு தெருக்கள் இருக்கக்கூடாது என அரசாணை உள்ளது. அந்த தெருவின் பழைய பெயர் ஜி.டி. தெருதான். தற்போதுதான் நாயுடு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. எங்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அந்த வார்த்தையை அழித்தேன். பாஜகவினரின் கருத்துகளை பார்த்தேன். அது அவர்களின் கருத்து. நான் தவறு செய்யவில்லை, நியாயப்படிதான் இதனை செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.