Crime: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக இலாபம் சம்பாதிக்கலாம்; 9 இலட்சம் மோசடி - ராஜஸ்தான் மோசடி கும்பல் கைது
போலியான ஆன்லைன் செயலி மூலம் அதிக இலாபம் கிடைத்து இருப்பதாக அந்த நபர் ராமசாமியை நம்ப வைத்துள்ளார். ஆனால் அந்த செயலி சில நாட்களுக்கு பிறகு செயல்படவில்லை.
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. 28 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகியாக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாட்ஸ் ஆப்பில் ஒரு மொபைல் ஆப் லிங்க் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த நபர் போனில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக இலாபம் சம்பாதிக்க அந்த செயலியை போனில் பதிவிறக்கம் செய்து, டெலிகிராம் குழுவில் இணைய வேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பிய ராமசாமி ‘பைன்’ என்ற அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் வங்கிக் கணக்கில் இருந்து 9.28 இலட்ச ரூபாயை அந்த நபர் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ராமசாமி அனுப்பி உள்ளார்.
போலி செயலி மூலம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் கிடைக்கும் இலாபத்தை அடிக்கடி அப்டேட் செய்வதாக அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார். போலியான ஆன்லைன் செயலி மூலம் அதிக இலாபம் கிடைத்து, அவரது வங்கிக் கணக்கில் 32 இலட்ச ரூபாய் இருப்பதாக அந்த நபர் ராமசாமியை நம்ப வைத்துள்ளார். ஆனால் அந்த செயலி சில நாட்களுக்கு பிறகு செயல்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விசாரித்த போது, ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ராமசாமி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
மோசடி கும்பல் கைது
வங்கி கணக்கு எண்களை வைத்து சைபர் கிரைம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சென்ற கோவை சைபர் கிரைம் காவல் துறையினர், ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் உதவியுடன் அந்தக் கும்பலை பிடித்தனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சத்யநாராயணன் (30), கிஷான் செளத்ரி (20), சுனில் சரண் (23), சந்தீப் குமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், பல்வேறு வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த 4 இலட்ச ரூபாய் பணத்தை முடக்கியுள்ளனர். பின்னர் 4 பேரையும் கோவைக்கு அழைத்து வந்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.