உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற நிலையில், 3 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற நிலையில், 3 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சீகூர் வனபகுதி. இந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கார்த்திகை தீபம் திருவிழாவிற்காக கோவில் திறக்கபட்டு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக உதகை, கோத்தகிரி, எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர் மற்றும் பேரகணி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர்.
இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு செல்லும் வன பகுதியில் ஓடும் ஆனிக்கல் ஆற்றைக் கடந்து சென்ற போது, காலையில் தண்ணீர் குறைந்த அளவை ஆற்றில் சென்றுள்ளது. அங்கு அவர்கள் அமர்ந்திருந்த நிலையில் மாலை 6:15 மணியளவில் இந்த ஆறு அமைந்துள்ள மேல்பகுதி மலைகள் மீது பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் ஒவ்வொருவராக தரைப்பாலம் வழியாக ஆற்றை கடக்க முயன்ற போது உதகை ஜெக்கலொரை கிராமத்தை சார்ந்த சரோஜா (65), வாசுகி (45), விமலா (35) மற்றும் சுசிலா (56) ஆகிய 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனைப் பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதாலும் ஆற்றால் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடுவதாலும் மாயமான 4 பெண்களை இரவு 12:30 மணி வரை தேடினர். ஆனால் யாரும் தென்படாததால் தேடும் பணி காலை முதல் மீண்டும் தொடர தீயணைப்பு துறையினர் முடிவு செய்தனர்.
இதனிடையே காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 200க்கும் மேற்பட்ட பக்தர்களை அதிகாலை இன்று அதிகாலை 2.30மணி வரை தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றின் நடுவே கயிறு கட்டி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாசுகி, சரோஜா உள்ளிட்ட 3 பேரின் உடல்களை சடலமாக மீட்புக் குழுவினர் மீட்டனர். தொடர்ந்து மற்றொரு உடலை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வந்த 4 பெண் பக்தர்கள் காட்டற்று வெள்ளத்தில் அடித்து சென்று நிலையில், 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்