![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தல்
1 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பிலான 3985 கிராம் தங்க கட்டிகள், 1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
![3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தல் 3 crore worth of smuggled goods seized at Coimbatore airport 3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/16/8ec45f28f095c511d9b54f01dae75e33_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை சிட்ரா பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கி குண்டுகள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதியன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது தங்க கட்டிகள், வெளிநாட்டு சிகரெட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை உடமைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 1 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பிலான 3985 கிராம் தங்க கட்டிகள், 1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு பல்வேறு கடத்தல் நபர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இக்கடத்தலில் வேறு எந்தெந்த நபர்களுக்கு தொடர்பு உள்ளது, இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் உள்ளிட்டவை குறித்து 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)