கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி - செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 25 டன் மாம்பழங்கள், சாத்துகுடிகள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டு குழுவாக மொத்தம் 16 பேர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டன. இந்த திடீர் கள ஆய்வின் போது 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி-I, பவள வீதி-II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டு குழுவாக மொத்தம் 16 பேர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டன. இந்த திடீர் கள ஆய்வின் போது 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தது கண்டறியப்பட்டது. அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட சுமார் 22.5 டன் எடை கொண்ட மாம்பழங்கள், சுமார் 2.5 டன் எடை அளவு உள்ள சாத்துகுடிகள் என மொத்தம் சுமார் 25டன் எடையுள்ள பழங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க பழங்கள் கொட்டி அழிக்கபட்டு, அதன் பின்னர் அதனை உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் பனிரெண்டு இலட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து நானூறு ரூபாய் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து 16 பழக்கடை மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய இரசாயன பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ”இது போன்ற கார்பைட் கல், எத்திலீன் இரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்புள்ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்புள்ளது. எனவே இது போன்று முறையற்ற விகிதத்தில் இரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்