வேலுமணி மீது ரூ.1500 கோடி டெண்டர் முறைகேடு.. 12 ஆயிரம் பக்க ஆதாரத்தை அடுக்கும் சமூக ஆர்வலர்
விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட 12 நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கி சுமார் 1500 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டதாக தியாகராஜன் புகார் தெரிவிக்கிறார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் மற்றும் டெண்டர் முறைகேடு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தொடர்பான 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 1500 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்து இருப்பதாக எஸ்.பி.வேலுமணி மீது புகார் எழுந்துள்ளது.
கோவை சவுரி பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன் என்பவர், கோவை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக செய்யப்பட்ட பணிகள் மற்றும் வரவு செலவு கணக்குகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளார். கோவை மாநகராட்சி 12 ஆயிரம் பக்க தகவல்களை அவருக்கு வழங்கியுள்ளது. அதன்படி விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட 12 நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கி சுமார் 1500 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டதாக தியாகராஜன் புகார் தெரிவிக்கிறார்.
இது குறித்து தியாகராஜன் கூறுகையில், "கோவை மாநகராட்சியில் 2016 ம் ஆண்டு நவம்பர் முதல் 2021 மே மாதம் வரை 2886 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாததால் கடந்த 5 ஆண்டுகளில் கோவை மாநகராட்சியில் செய்யப்பட்ட பணிகள், ஒப்பந்தங்கள் யாருக்கு வழங்கப்பட்டது, எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்களை பொது மக்கள் பார்க்க முடியாத நிலை இருந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அந்த தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. கோவை மாநகராட்சி வரவு செலவு கணக்கு விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மேல் முறையீடு செய்து 12 ஆயிரம் பக்க தகவல்களை பெற்றேன்.
இந்த தகவல்களை ஆராய்ந்ததில், கடந்த 5 ஆண்டு கோவை மாநகராட்சி பணிகள் வெறும் 12 நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் முடிக்கப்பட்ட பணிகளுக்காக மூலதன நிதியில் இருந்து 697 கோடி ரூபாய் இந்த 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பணிகள் முடித்தும் 123 கோடி ரூபாய் பணம் வழங்கப்படாமல் இருப்பதும், 130 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது. இதேபோல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 1000 கோடி ரூபாய் பணிகளும், ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தில் 400 கோடி ரூபாய் பணிகளும் இந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1500 கோடி ரூபாய் டெண்டர்களை அதிகாரத்தை பயன்படுத்தி, டெண்டர் விதிகளை மீறி முறைகேடாக இந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். அனைத்து டெண்டர்களிலும் இந்த 12 நிறுவனங்களுக்கும் மட்டுமே மாற்றி மாற்றி வழங்கப்பட்டுள்ளன. தற்போது இலஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு தான் 70 சதவீத பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் மக்கள் பணம் சூறையாடப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
ஒரு டெண்டரில் இவர்களுக்குள் 2 அல்லது 3 நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் செய்துள்ளனர். டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கவில்லை. டெண்டர் விதிகளை கடை பிடிக்கவில்லை. 2018 ம் ஆண்டில் புகார்களுக்கு உள்ளான நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் மூளையாக செயல்பட்டு அனைத்து ஒப்பந்தங்களையும் எடுத்துள்ளார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். என்னிடம் உள்ள தகவல்களை இலஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சமர்ப்பிக்க தயாராக உள்ளேன்" என அவர் தெரிவித்தார்.