தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தினருடன் முதல்வர் ஆலோசனை
கோவேக்சின் தடுப்பூசியை தமிழகத்திலேயே தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
தமிழத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி உள்ள நிலையில் தினசரி பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கி உள்ளது. இதன்காரணமாக கொரோனா நோய் தொற்று குறைவாக பதிவாகும் இடங்களில் தமிழக அரசு சில தளர்வுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மக்கள் அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை போடுவதற்காக மாநில அரசே தமிழகத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.எல்.எல் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியதுடன் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஹெச்.எல்.எல் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க மாநில அரசிடம் குத்தகைக்கு விடக்கோரி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து தமிழக அரசுக்கு செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைக் குத்தகைக்கு வழங்கக் கோரிய தங்களது திட்டத்தையும் அளித்திருந்தனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசின் சார்பில் விரைவில் செய்திக் குறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு 18 வயது மேற்பட்டவர்களுக்கு மாநில அரசுகளும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து விநியோகிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டிற்காக 3.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக உலகளவில் டெண்டரையும் தமிழக அரசு கோரியுள்ளது. கோவிட் தடுப்பூசி, உயிர்க்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழ்நாட்டில் தயாரிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மே 31ஆம் தேதிக்குள் மனுவாக அளிக்க தமிழக அரசு கோரியிருந்தது. 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான விருப்பமனுக்களையும் அளித்துள்ளதாக தமிழக அரசும் தெரிவித்திருந்தது.
இந்தியாவை பொறுத்தவரை கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களாக பாரத் பயோடெக் மற்றும் சீரம் இண்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்கள் உள்ளது. இந்தநிலையில் இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை தமிழகத்திலேயே தயாரிப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் சுசீந்திர இலா, செயல் இயக்குநர் சாய்பிரசாத், தொழில்துறை சிறப்பு செயலாளர், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை செயலாளர், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.