Crime: கஞ்சா புகைக்க பணம் கொடுக்க மறுத்த தாய்...! வீட்டையே கொளுத்தி தப்பியோடிய மகன்..!
காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அபுஹாலித் கஞ்சா போதைக்கு அடிமையாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளது தெரிய வந்தது.
சென்னை, காசிமேடு ஏ.ஜே.காலனி நான்காவது தெருவில் உள்ள அடுக்குமாடித் தளத்தில் வசித்து வரும் அபுஹாலித் என்பவர், நேற்று மதியம் தனது தாய்க்கு போன் செய்து வீட்டைத் தீவைத்து கொளுத்தி விட்டதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் தங்களது குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வரும் தனது மூத்த மகன் ஜமாலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் அளித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அங்கு விரைந்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அபுஹாலித் கஞ்சா போதைக்கு அடிமையாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளது தெரிய வந்தது.
பணம் கேட்டு தகராறு :
நேற்று வழக்கம்போல் அபுஹாலித் தன் தாயிடம் கஞ்சா புகைப்பதற்கு பணம் கேட்டு நச்சரித்துள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்த நிலையில், தன் தாய் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு, அதனை ஃபோன் செய்து தெரிவித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில், தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் 10க்கு மேற்பட்டோர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாயின. அபுஹாலித் தப்பியோடிய நிலையில், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முந்தைய சம்பவம்
இதேபோல் முன்னதாக கஞ்சா புகைப்பது போன்று வீடியோ எடுத்து பதிவிட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மீன்வெட்டும் தொழிலில் ஈடுபடும் இளைஞர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை கண்டாச்சிபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக கண்டாச்சிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் காசிமேடு பகுதியில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் சதீஷ் கஞ்சா போதைக்கு அடிமையானதும், கஞ்சா புகைத்துவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து சதீஷை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து , அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.