VJ Chitra Death: ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் வழக்கு
ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்தரமாக நடமாடவிட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததாகவும் இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார். ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்தரமாக நடமாடவிட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்