முதல்வர் உடல் நிலை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
தமிழக முதலமைச்சர் நலமாக இருக்கிறார். உடல் நலம் குறித்து மருத்துவர்கள் விரிவான அறிக்கை தருவார்கள். விரைவில் முதலமைச்சர் குணம் அடைந்து வீடு திரும்புவார் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவ - மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ;
பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண இது போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் கை கொடுக்கிறது.
வாழ்க்கைக்கு தேவையான அத்தனை குணங்களையும் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. சாதாரண பாட புத்தகத்தை மட்டும் படிக்கும்போது இதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியாது. படிப்பு விளையாட்டு இரண்டிலும் ஈடுபடக் கூடிய மாணவர்கள் எப்போதும் தனி சிறப்புடன் இருப்பார்கள்.
கிரவுண்டு பக்கம் எப்பவாவது தலை காட்டினால் போதும் என்று மட்டும் இருந்து விடக் கூடாது
விளையாட்டிற்கென தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தவறாமல் தினமும் பயிற்சி செய்ய வேண்டும். கிரவுண்டு பக்கம் எப்பவாவது தலை காட்டினால் போதும் என்று மட்டும் இருந்து விடக் கூடாது. மென்மேலும் போட்டிகளில் அதிகம் பங்கேற்க வேண்டும். விளையாட்டை பொருத்தவரையில் வெற்றி எவ்வளவு முக்கியமோ அதேபோல விடா முயற்சியும் முக்கியம்.
விளையாட்டு வீரர்களுக்கு எந்த நாளும் துணையாக திமுக அரசும் முதலமைச்சரும் நாங்களும் உறுதுணையாக இருக்கிறோம். அத்தனை விளையாட்டு வீரர்களும் சாம்பியன் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு தமிழ்நாடு முதல்வர் கோப்பை பதிவை தொடங்கி இருக்கிறோம். பரிசுத் தொகை மட்டும் 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
பிடி பிரியட் - கடன் வாங்க வேண்டாம்
பிடி பிரியட் யை எந்த டீச்சரும் கடன் வாங்கி பாடம் எடுக்க வேண்டாம். பிடி பீரியட் ஒவ்வொரு மாணவருக்குமான உரிமை இதில் அனைவரும் நிச்சயமாக விளையாட வேண்டும். ஒலிம்பிக் என்றாலே 1992 - ல் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் டெரிக் ரெட்மென்ட் செய்த செயல் தான் அனைவரின் விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. அப்போது ஓட்டப் பந்தயத்தில் அவர் வெற்றி பெறவில்லை. தசைப்பிடிப்பு ஏற்பட்டாலும் அவரும் அவர் தந்தையும் சேர்ந்து அந்த ஓட்டப் பந்தயத்தை நிறைவு செய்தார்கள்.
எனவே நாம் வெற்றி பெற்று தான் உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்பது அல்ல, விடா முயற்சி உடன் முழுமையாக முயற்சி செய்தாலே வெற்றி தான் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ;
தமிழக முதலமைச்சர் நலமாக இருக்கிறார். உடல் நலம் குறித்து மருத்துவர்கள் விரிவான அறிக்கை தருவார்கள். மூன்று நாள் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளார்கள் விரைவில் முதலமைச்சர் குணம் அடைந்து வீடு திரும்புவார்.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்த கேள்விக்கு ,
துணை குடியரசுத் தலைவர் ராஜினாமா குறித்து கருத்து கூற விருப்பமில்லை. பிரதமர் இந்த வாரம் தமிழ்நாட்டுக்கு வருகை உள்ளது குறித்த கேள்விக்கு , அமித்ஷாவும் பிரதமரும் அடிக்கடிக்கு தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்றார்.




















