Kanchipuram Car Festival : 2 வருடங்களுக்கு பிறகு தேரோட்டம்.. காஞ்சிபுரம் வருபவர்களுக்கு போக்குவரத்து துறை அறிவிப்பு இதுதான்..!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் தேரோட்டத்தையொட்டி நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த 4 தற்காலிக பேருத்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவமானது கடந்த 13-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தை யொட்டி அனுதினமும் காலையிலும் மாலையிலும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களின் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது வரும் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
நாளை (19-05-22) நடைபெறும் திருத்தேர் உற்சவம் நகர்முழுவதும் வலம் வருவதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 4 தற்காலிக பேருந்து நிலையம் அமைத்துள்ளனர்.
- அதன்படி சென்னை, பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் - புதிய ரயில்வே நிலையம் பகுதியில் நிற்கும்.
- வேலூர், திருத்தணி, திருப்பதி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் - ஒலிமுகமதுபேட்டை பகுதியில் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் - பகுதியில் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உத்திரமேரூர், கீழ்ரோடு திண்டிவனம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் - மிலிட்டரி ரோடு பகுதிகளிலும் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலமானது தெரிவித்துள்ளது.
காவல்துறை பாதுகாப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கருட சேவையின் பொழுது ஏராளமான நபர்களின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற தேரோட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆண், பெண் காவலர்கள் தனித்தனியாக பிரிந்து சீருடை அணியாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர் ஊர்வலமாக செல்லும் சாலை மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கும் சாலைகளில் காவல்துறை சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல காவல்துறை சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சி களையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் கடந்த காலங்களில் வந்த மக்கள் கூட்டத்தை, விட அதிக அளவு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது . எனவே அதற்கேற்றார்போல், காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.