TN Rains: 4 ஆயிரம் பணியாளர்கள்.. 24 மணி நேர கண்காணிப்பு.. எந்த மழையையும் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
TN Rains: எந்த மழையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று வருவாய் மற்றும் பேரிடர்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை வெளுத்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழை நீர் குளம்போல சாலைகளில் தேங்கியுள்ளது. இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். நிருபர்களைச் சந்தித்தார்.
சுரங்கப்பாதையில் நீர்த்தேக்கமா?
அப்போது, அவர் கூறியதாவது, “ சென்னையில் மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் உள்ளது. சென்னை மாநகராட்சி – நெடுஞ்சாலை பகுதியில் கணேசபுரத்தில் மட்டும்தான் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்றும் பணியை விரைவாக செய்து கொண்டிருக்கின்றனர். ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் வரும் புகார்களை பெற்றுக்கொண்டு சரி செய்கிறோம். வேண்டிய துரித நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
தற்போது வரை எந்தவொரு மனித உயிர்சேதமோ, விலங்குகள் உயிர்சேதமோ இல்லை. மாநகராட்சியில் இருந்து 4 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடந்த வாரமே முதலமைச்சர் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து தென்மேற்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியுள்ளார்.
தயாராக உள்ளோம்:
இன்றும் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை செய்து அந்த பகுதிகளை உன்னிப்பாக கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் திருவாரூரில் இருந்தாலும் அவர் மனது மழையால் மக்கள் பாதிக்கக்கூடாது என்றுதான் பார்த்துக் கொள்கிறார். நாங்கள் முழு நேரமும் மழை பெய்யும் வரை கண்காணிப்பு மையத்தில் இருந்து கண்காணிப்பு பணிகளை செய்வோம்.
நம் மாநில மீட்பு படையினர் 40 பேரை மாநகராட்சி முழுவதும் அனுப்பியுள்ளோம். எந்த உயிர்சேதமும் இல்லாத வகையில் இந்த மழையை எதிர்கொள்வோம். எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு தயாராக உள்ளோம். அனைத்து இடங்களிலும் மோட்டார் உள்பட அனைத்தும் தயார் நிலையில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை:
நமக்கு சென்னையில் ஏற்கனவே மழை பெய்ததை கையாண்ட அனுபவம் இருப்பதால், எங்கெங்கு நீர் தேங்கும் என்பதை பார்த்து தக்க நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கிறோம். குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கடந்த மழையில் எங்கெங்கு பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளோம். அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகவே உள்ளோம்.
இந்த மழை மேலடுக்கு சுழற்சி காரணமாக திடீரென வந்துள்ளது. பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். பருவமழை மட்டுமின்றி திடீரென்று பெய்யும் மழையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். 6 இடங்களில் 35 கிளைகள் விழுந்துள்ளது. “
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க: Shatabdi Express: பாதி வழியில் திடீரென நின்ற சதாப்தி எக்ஸ்பிரஸ்.. அவதியில் பயணிகள்.. காரணமும் மாற்று ஏற்பாடும்!
மேலும் படிக்க: Minister Senthil Balaji: காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி - மேல் முறையீடு செய்த அமலாக்கத்துறை: நாளை மறுநாள் விசாரணை