Minister Senthil Balaji: காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி - மேல் முறையீடு செய்த அமலாக்கத்துறை: நாளை மறுநாள் விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல் முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுநாள் அதாவது ஜூன் மாதம் 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, அமலாக்கத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை அதிகாரியான ,அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரி சார்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனைக்கு சென்றபோது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அன்றைய தினம் நடைபயிற்சிக்கு சென்றபோது நன்கு ஆரோக்கியத்துடன் இருந்த அவர் திடீரென நெஞ்சுவலி என்று கூறி, அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அரசு போக்குவரத்து கழகங்களில் பல்வேறு முறைகேடுகளை செய்து தகுதியற்ற பலருக்கு பணி வழங்கியுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். எனவே, அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல, ஜாமீன்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.
அதன்படி, நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ், செந்தில் பாலாஜிதரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் அடுத்த நாள் ஆஜராகினர். காணொலி வாயிலாக செந்தில் பாலாஜியும் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நீதிபதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் அதிகாரிகள் அந்த மருத்துவமனையிலேயே விசாரணையை தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தார்.
மேலும் செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் அமலாக்கத் துறைக்கு பல்வேறு நிபந்தனைகளை அமர்வு நீதிமன்றம் விதித்தது. அதன்படி, மருத்துவமனையைவிட்டு அவரை வேறு எங்கும் அழைத்துச் செல்லக் கூடாது. அவரது உடல்நிலை குறித்து அறிந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் ஒப்புதல் பெற்றே விசாரிக்க வேண்டும். அவருக்கோ, சிகிச்சைக்கோ இடையூறு, துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் விசாரணை இருக்க கூடாது. இவ்வாறு நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்தது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்துதான், அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்துள்ளது.