Chengalpattu vaccine plant: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்த குத்தகைக்கு கொடுங்க : முதல்வர் ஸ்டாலின் அதிரடி கடிதம்
அதி நவீன வசதிகள் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையம் பயன்படுத்தப்படாமல் உள்ளதை நீங்கள் அறிவீர்கள் எனவும் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்து, அங்கு உற்பத்தியை தொடங்குவது பற்றி கலந்தாய்வு நடத்தினார்.
இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதினார். கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மத்திய அரசின் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்றும், முழு சுதந்திரத்துடன் தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு அளித்தால் உடனடியாக தடுப்பூசி பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதி நவீன வசதிகள் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையம் பயன்படுத்தப்படாமல் உள்ளதை நீங்கள் அறிவீர்கள் என பிரதமருக்கு சுட்டிக் காட்டிய முதல்வர், தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவதற்காக, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை டெல்லி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
‘மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசே தடுப்பூசிகளை தயாரித்து சொந்தப் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ளவற்றை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். மாறாக, செங்கல்பட்டு வளாகத்தில் மத்திய அரசே தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத ஒன்றை கூறுவதன் மூலம் யாருக்கும் எந்த பயனும் கிடைக்காது. செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்காக தமிழக அரசும் குரல் கொடுத்தது என்ற பெயர் மட்டுமே கிடைக்கும்.
கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால், டிசம்பருக்குள் தமிழகத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டாக வேண்டும். அதற்கு குறைந்தது 12 கோடி தடுப்பூசிகள் தேவை. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை ஏற்று நடத்தாமல், வேறு எந்த வழியிலும் இவ்வளவு தடுப்பூசிகளை தமிழக அரசால் பெற முடியாது. இது தான் எதார்த்தம் ஆகும்’ என்று தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.