வெள்ளத்திலிருந்து விடிவு காலம்... சென்னையில் வருகிறது ஸ்பாஞ்ச் பூங்கா... அப்படியென்றால் என்ன?
சென்னை வடபழனி கோயில் தண்ணீர் தொட்டியில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் அங்கு நீர் தேக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிங்காரச் சென்னைத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்தது. அதன்படி சென்னையின் அடிப்படை கட்டமைப்புகளை சீர் செய்து ஹை டெக் நகரமாக தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தான் சென்னையில் “ஸ்பாஞ்ச் பூங்கா” அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்து உள்ளது. சென்னை கார்கில் நகரில் செயற்கை குளம், ஏராளமான மரங்களை கொண்ட ஸ்பாஞ்ச் பூங்காவை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது. கொசஸ்தலை ஆறு பகுதியில் செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த புயல், வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் இது கொண்டு வரப்பட உள்ளது. அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் உள்ள டேனர் பூங்காவை மாதிரியாகக் கொண்டு இந்த ஸ்பாஞ்ச் பார்க் அமைக்கப்படும்.
ஸ்பாஞ்ச் பார்க் என்றால் என்ன? என்ற கேள்வி உங்களில் பலருக்கும் எழுந்திருக்கும். SPONGE என்றால் தமிழில் பஞ்சு என்று நாம் அறிந்திருப்போம். பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ அதுபோல், இதன் பெயரை கொண்டு அமைக்கப்படும் பூங்காக்கள் மழைக் காலங்களில் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதிகளவில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், வெள்ள நீர் விரைந்து வடிவதற்கும் இந்த ஸ்பாஞ்ச் பார்க் உதவும். உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஸ்பாஞ்ச் பூங்காவின் கட்டமைப்பு:
- கட்டிடங்கள் நிறைந்த நகரப்புறங்களில் பெய்யும் மழை நீரை தேங்கவிடாமல் சேகரித்து, சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
- ஸ்பாஞ்ச் பூங்காவுக்கு அமைக்கப்படும் தொட்டியில் கூழாங்கற்கள், மணல் கொண்ட அடுக்குகள் இருக்கும். அதன் மத்தியில் இயற்கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்படும்.
- எந்த வித கான்கிரீட் கட்டுமானங்களும் இல்லாத ஒரு செயற்கையான ஈரநிலமாக இது அமைக்கப்படும்.
- தண்ணீரை சேகரிக்க ஆங்காங்கே குளங்கள் அமைக்கப்படும்.
- பூங்காவில் அமைக்கப்படும் குளங்களை சுற்றி தண்ணீரை வேகமாக உறிஞ்ச ஏராளமான மரங்கள் நடப்பட்டு செயற்கை மழைக்காடு போல் உருவாக்கப்படும்.
- இதனால் எப்போதும் குளிர்ச்சியான சூழலைத் தரும் ஸ்பாஞ்ச் பூங்கா, கோடைக்காலங்களில் மக்கள் இளைப்பாறுவதற்கு பயன்படும்.
வெள்ளநீரை சேகரிக்க கான்கிரீட் டேங்குகளை அமைப்பதற்கு பதில் புதிய தொழில்நுட்பமான ஸ்பாஞ்ச் பூங்காவை சென்னையில் பயன்படுத்தினால் நிச்சயம் பயன்தரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ”இதில் அமைக்கப்படும் மழை பூங்காக்கள் 48 மணி நேரத்துக்குள் வெள்ளநீரை முழுமையாக உறிஞ்சிவிடும். இதனை வளர்ப்பதற்கும் போதிய உரங்கள் தேவைப்படாது. முதல் ஆண்டை தவிர்த்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இதற்கான பராமரிப்பு செலவும் அதிகம் இருக்காது” என அவர்கள் கூறுகின்றனர்.
”சென்னை வடபழனி கோயில் தண்ணீர் தொட்டியில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் அங்கு நீர் தேக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது.” என்கிறார் மழை நீர் சேகரிப்பு நிபுணர் ஆர்.ஆர்.சிவராமன்.
2015-ல் சென்னையை புரட்டிப்போட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகும் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் சென்னையில் வெள்ளநீர் தேக்கம் என்பது தொடர்கதையாகி வரும் சூழலில் இந்த ஸ்பாஞ்ச் பூங்கா திட்டம் புதிய நம்பிக்கையை தரும் வகையில் இருக்கிறது.