பாம்பு விஷம் விற்பனை... 3 ஆண்டுகளில் ஐந்தரை கோடி.. பாம்பு விஷத்தில் இவ்வளவு இருக்கா ..!
mamallapuram snake farm: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வடநெம்மேலியில் செயல்பட்டு வரும், பாம்பு பண்ணையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்தரை கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது
பாம்பு விஷமுறிவு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 1807 கிராமம் விஷம் வழங்கியதின் மூலம் நல்ல வருவாய் பார்த்த வடநெம்மேலி பாம்பு பண்ணை. கடந்த 3 ஆண்டுகளில் பாம்பு விஷம் மூலம் வடநெம்மேலி பாம்பு பண்ணை ரூ.2½ கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
பாம்பும் விஷமும்..
"பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்" பலருக்கு பாம்பு மீது அளவு கடந்த பயம் இருக்க தான் செய்கிறது. ஏன் ஒரு சிலர் பாம்பை போல உருவத்தை கண்டால் கூட , பயப்படும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பாம்பின் உருவத்தின் மீதும், பாம்பின் விஷம் மீதும் பல நூற்றாண்டுகளாக பயம் இருந்து வருகிறது. இதனால்தான் பல நாகரிகங்களில் பாம்பை கடவுளாக வணங்குகின்றனர்.
தமிழர் நாகரிகத்திலும் பாம்பை கடவுளாகவே பார்க்கின்றனர். ஆனால் விஷமிருக்கும் பாம்பிலிருந்து, மருத்துவ பயனும் இருக்க தான் செய்கிறது. பாம்பு கடித்தால் கூட அதற்கு மருந்தாக, ஏதோ ஒரு வழியில் பாம்பு விஷம் பயன்படுகிறது. அந்த வகையில் மாமல்லபுரம் பகுதியில் இயங்கி வரும் பாம்பு பண்ணை, பாம்பு விஷத்தின் மூலம் நல்ல வருவாயை ஈட்டி உள்ளது.
பாம்பும் இருளர் இன மக்களும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் இருளர் பழங்குடி மக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். வயல்வெளிகள் மற்றும் வனப்பகுதியில் பாம்பு பிடிப்பது இவர்களின் முக்கிய தொழிலாகும். இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வாதார மேம்பாடு கருதி, தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் வணிகத்துறையின் கீழ் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் கடந்த 1978 முதல் தொடங்கப்பட்டு, அந்த சங்கத்தின் மூலம் அங்கு பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது.
அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பாம்பு கடி விஷ முறிவு மருந்து தயாரிக்க, பார்வையாளர்கள் முன்னிலையில் கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் போன்ற விஷ பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கின்றனர்.
பாம்பு பிடிப்போர் கூட்டுறவு
சங்கத்தில் உறுப்பினராக உள்ள பழங்குடி இருளர்கள் பிடித்து வரும் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட விஷ பாம்புகளி லிருந்து விஷத்தை பிரித்து எடுத்து, மகாராஷ்டிரா மாநிலம், புனே உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள விஷமுறிவு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு வருகிறது.
விஷமும் அதன் விலையும்..
ஒரு ஆண்டிற்கு சராசரியாக 500 கிராம் விஷம் எடுத்து, 1½ கோடி ரூபாய் வரை விற்று, தமிழக அரசிற்கும் இச்சங்கம் பங்களிப்பு தொகை அளித்து வருகிறது. இச்சங்கம், கடந்த மூன்றாண்டுகளில், 1,807 கிராம் விஷம் எடுத்து, 5½ கோடி ரூபாய்க்கு விற்று, 2½ கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாக வடநெம்மேலி பாம்பு பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்பொழுது மீண்டும் பாம்பு பண்ணை செயல்பட தொடங்கியுள்ளது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போல, வருவாயை ஈட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாம்பிலிருந்து விஷம் எடுக்கப்பட்ட பிறகு மீண்டும் பாம்பு வனப்பகுதிகளில் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது