TN SIR Voter List: தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா? உடனே சரிபார்க்கவும்!
SIR Draft Roll Tamilnadu: தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் பதிவேற்றம் முடிந்த நிலையில் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
பேட்டியில், “எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் தமிழ்நாட்டில் மொத்தமாக 5,43,76,755 வாக்களர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 வாக்களர்கள்(15.18%) நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்களர்களே அதிகம் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233. பெண் வாக்காளர்கள் 2,77,06,332. மாற்றுத்திறனாளி வாக்களர்கள் 4,19,355; மூன்றாம் பாலினத்தவர் 7,191 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் 66,44,881 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கம்
சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டும். அதில் பெயர் இல்லாதவர்கள் பி.எல்.ஓக்களை அணுகலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச்சாவடி வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். 12 லட்சம் பேர் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை திரும்பி அளிக்க விரும்பவில்லை. எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் நாளை இணையத்தில் வெளியிடப்படும். அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நாளை தங்களது பெயர் சரிபார்த்துக்கொள்ளலாம்” என்றார்.
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
SIR-க்கு முன் 6,41,14,587
SIR-க்கு பின் 5,43,76,755
நீக்கப்பட்டவர்கள் 97,37,832 - 15.18%
சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்
சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர்க்கு முன்பு 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆர்க்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேர் உள்ளனர். 14,25,018 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.





















