Kilambakkam Protest: கிளாம்பாக்கத்தில் மீண்டும் பிரச்னையா? போராட்டத்திற்கு காரணம் என்ன ? அதிகாரிகள் விளக்கம் என்ன ?
Kilambakkam Bus Stand: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில், கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.
கசப்புகளை மறந்த மக்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பௌர்ணமி, அமாவாசை, சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆகாயம் மேம்பாலம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பே பெற்று வருகிறது.
கிளாம்பக்கத்தில் திடீர் போராட்டம்
இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகளுக்கு பயணிகள் வரும் வழியில் உள்ள கதவை, பேருந்து நிலையத்தை பராமரிப்பு செய்யும் தனியார் நிறுவனம் மூடியதால் அரசு விரைவு பேருந்துகளுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் புகார் தெரிவித்தனர்.
அரசு பேருந்துகளுக்கு வரும் வழியை பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம் மூடி வைத்திருப்பதாகவும், அதே நேரத்தில் பேட்டரி வாகனத்தில் அழைத்து, வரும் பயணிகளை நேரடியாக ஆம்னி பேருந்துகள் இருக்கும் இடத்திற்கு கொண்டு விடுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் அரசு பேருந்தில் பயணிகள் வருகை குறைந்து உள்ளதாக தெரிவித்து போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து கலந்து போக செய்தனர்.
போராட்டத்தின் பின்னணி என்ன ?
இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தென்மாவட்ட பேருந்துகளுக்கு பயணிகள் வந்து கொண்டிருந்தவாசல் கதவுகள் அனைத்தையும் KCBT நிர்வாகம் அடைத்துவிட்டது. இதனால் பேருந்துகளுக்கு பயணிகள் வரத்து நின்றுவிட்டது. அனைத்து பயணிகளும் தனியார் பேருந்துகளுக்கு (ஆம்னி பஸ் ) செல்லும்படி வாசல் திறந்துவைத்து உள்ளனர். எனவே விரைவுக் கழக பேருந்துகள், ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகள் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக டிரிப் எடுக்க முடியாமல் காத்துக் கிடக்கின்றனர்.
நேரக் காப்பாளர்களும் பேருந்திற்கு தலா 25 பயணிகள் ஏற்றி டிக்கட் அடித்து காண்பித்தால்தான் டைம் போடுவோம் என்று கூறுகிறார்கள். இதனாலும் பேருந்துகள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன இதனால்தான் போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் விளக்கம் என்ன ?
இது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : போராட்டம் நடைபெறுவதற்கான பிரச்சினைகள் எதுவும் இல்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கதவுகள் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவாக இந்த பேருந்தில் நிறுத்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒரு தலைது பச்சைமாக எப்போதும் சிஎம்டிஏ செயல்பட்டது கிடையாது. அரசு பேருந்தை பயன்படுத்தபவர்களை யாராலும் தடுக்கவும் முடியாது, விருப்பம் இருப்பவர்கள் மட்டுமே ஆம்னி பேருந்தை பயன்படுத்த உள்ளனர். அப்படி இருக்க இது போன்ற குற்றச்சாட்டுகள் தேவையில்லாதது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.