"என்னிடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்" - சைதை துரைசாமி யாரை சொல்கிறார்?
கே.பி.முனுசாமியின் செயல்களைப் பற்றி முழுக்க அறிந்தவன் நான். தயவு செய்து என்னிடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பிரமுகரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ;
வேலை வெட்டி இல்லாதவர், அவருக்கு பல்வேறு கட்சியில் உள்ள தொடர்புகளை வைத்து கொண்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அதைப் பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் பேட்டி.
பொதுமக்களிடத்தில் தோலுரித்து காட்ட வேண்டும்
சேவை செய்பவனை வேலை வெட்டி இல்லாதவன் என்ற புதிய பார்வையை கூறி இருக்கிறார் என்றால் , இவருக்கு சேவையைப் பற்றியோ மனித நேயத்தைப் பற்றியோ , சமூக அக்கறையைப் பற்றியோ எதுவும் தெரியாமல், தனக்காக தன் குடும்பத்திற்காக அரசியல் கட்சியில் இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
சேவையைப் பற்றி உணராத இப்படிபட்ட மனிதர்கள் பொது வாழ்கையில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களைப் பொது மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தச் செய்தியாளர் சந்திப்பு.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சூட்டிய பட்டங்கள்
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சைதை துரைசாமிக்கு சூட்டிய பட்டங்களை காணொளி காட்சியின் வாயிலாக செய்தியாளர்களுக்கு காண்பித்த பின்பு தொடர்ந்து பேசிய அவர் ,இப்படிப்பட்ட பணிகளைக் கட்சித் தலைவர்களை பேரன்பை பெற்றிருந்தேன் என்பதற்கு இதுவே சான்று. நான் செய்த பணிகளை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் செய்வது என்று கூறுகிறார். அதிமுகவில் 2005 ஆம் ஆண்டில் இருந்து இயக்கப் பணி என்று கருதி சேவையை செய்திருக்கிறேன்.
30,000 மாநகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கி அவர்களின் கல்விப் பணிக்கு துணையாக இருந்தேன். 2005 ஆம் ஆண்டு மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளை ஜாதி மதங்களைக் கடந்து சக மனிதனை உறவாகக் கருதி ஏராளமானோருக்கு சேவை செய்துள்ளது.
வாயை கொடுத்து மாட்டி கொள்ள வேண்டாம்
1430 கிறிஸ்துவர்கள், 142 இஸ்லாமியர்கள் 47,048 இந்துகள் இந்த மனிதநேய அறக்கட்டளை உயர் பதவியில் அமர்த்தியுள்ளது. ஆனால் இவர் எத்தகைய வன்மம், சுயநலம் மிக்க பொது வாழ்க்கைக்கு லாயக்கு இல்லாதவர் என்பதை காட்டுகிறது.
இவர்களைப் பற்றியும் , இவர்களின் செயல்களைப் பற்றி முழுக்க அறிந்தவன் நான். தயவு செய்து என்னிடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். நான் கட்சியை நேசிப்பவன் உயிராக நினைப்பவன்.
உங்களை எல்லாம் விமர்சனம் செய்தால் கட்சிக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்ற காரணத்திற்காக நான் அமைதியாக இருக்கிறேன். ஒரு நாள் விடாமல் சட்டமன்றம் சென்றவன் நான். சென்ற அனைத்து நாள்களும் சட்டமன்றத்தில் பேசியவன்.
ஒரு கட்சி எப்படி நடக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்ல நான் யார் ? இந்தக் கட்சி உருவாக விதை போட்டவன். உங்களைப் போன்ற வந்தேறி கிடையாது. இந்தக் கட்சியை உருவாக்கியவன்.
முடிவுகளை மாற்றுவது தான் சாணக்கிய தனம்
பாஜகவுடன் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கேளுங்கள் விவாதிப்போம். 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வலிமையான எதிர்கட்சியாக இருப்பதைப் போல , நாடாளுமன்றத் தேர்தலில் சேர்ந்து போட்டியிட்டு இருந்தால் 26 இடங்கள் கிடைத்திருக்கும். இதன் மூலம் அதிமுகவிற்கு இரண்டு அமைச்சர்கள் கிடைத்து இருப்பார்கள். இதைச் சிந்தியுங்கள் என்று சொன்னால் வேலை வெட்டி இல்லாதவன் என்று கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட பெருமக்கள் இந்த இயக்கத்தை வழி நடத்துகிறார்கள் என நினைக்கிற போது அச்சமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். மாநில அரசின் அதிகாரம் , வலிமையான கூட்டணிக்கு முன்பு காணாமல் போய்விடுவீர்கள். இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை எனில் அதிமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது. அதுதான் எங்களுக்கு இருக்கிற வருத்தம். கட்சியை தற்போது நடத்துபவர்களிடம் இருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.
தேர்தலுக்குத் தேர்தல் முடிவுகளை மாற்றுவது தான் அரசியல் சாணக்கியத்தனம். அதிமுகவின் அனைத்து தலைவர்களையும் நிபந்தனை படி இணைத்தால் கட்சி பலம் பெற்றுவிடும். பிளவு என்ற சொல் இருக்கக் கூடாது. ஜாதி, மதம் என்ற பல கூறுகளால் இந்தக் கட்சியில் உள்ளார்கள். அனைத்து பிரிவையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர்.
என்னுடைய ஒரே வேண்டுகோள்.
அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கு பிஜேபியுடன் கூட்டணி உடனடியாக அறிவிக்க வேண்டும். பிரிந்து சென்றவர்களை நிபந்தனையோடு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

