Chennai Metro Rail: வேற லெவல்! டிரைவர் இன்றி இயங்கப்போகும் 10 மெட்ரோ ரயில்கள்...வேறென்ன ஸ்பெஷல் இருக்கு?
சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Chennai Metro Rail: சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்:
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களையும் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூ.269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்:
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட10 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம்டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில்நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், உயர்அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17-ஆம் தேதி வழங்கப்பட்டது.
ரூ.269 கோடியில் ஒப்பந்தம்:
இதனைத்தொடர்ந்து 27.11.2023 துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்கள் (மொத்தம் 30 பெட்டிகள்) என மொத்தம் 36 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடுபொறுப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ இரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ இரயில்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில்மெட்ரோ இரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.