சென்னை To வேலூர் 1 மணி நேரம் ! 20 நிமிஷத்துல காஞ்சிபுரம்! வேலூர் RRTS ரயில் லேட்டஸ்ட் அப்டேட்!
Vellore RRTS Train Latest Update: காஞ்சிபுரம் வழியாக சென்னையில் இருந்து வேலூர் செல்ல உள்ள ஆர்.ஆர்.டி.எஸ் ரயில் சாத்திய கூறுகள் தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Chennai-Kanchipuram-Vellore Regional Rapid Transit System (RRTS) Corridor: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கக்கூடிய வகையில் இந்த ஆர்.ஆர்.டி.எஸ் ரயில் சேவை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு
சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலை வாய்ப்புகளை தேடி தினமும் பல லட்சக்கணக்கான மக்கள், பொதுப் போக்குவரத்து மூலம் படையெடுத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், நீண்ட நேர காத்திருப்பு மற்றும் பயண நேரமும் அதிகரிப்பது பல்வேறு வகையில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு- Regional Rapid Transit System (RRTS)
தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி, விரிவான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, புதுடெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தது. இதன் மூலம் முக்கிய நகரங்கள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் மண்டல போக்குவரத்து ரயில் (Chennai - Kanchipuram - Vellore RRTS Train )
சென்னைக்கு அருகே இருக்கும் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக வேலூர் இருந்து வருகிறது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். பெரும்பாலானோர் சாலை மார்க்கமாக சென்னை வரவேண்டிய சூழல் இருப்பதால், பல மணி நேரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர்.
சாலை மார்க்கமாக, வேலூரில் இருந்து சென்னை வரவேண்டும் என்றால் 3 மணி நேரத்தில் 4 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. இதனால், சென்னையிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேலூருக்கு, ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி சாத்திய கூறுகள் தயாரிப்பதற்கான "டெண்டர்" விடப்பட்டது.கடந்த ஜூலை மாதம்-03 தேதி "பாலாஜி ரயில் ரோடு" என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்.ஆர்.டி.எஸ் ரயில் சேவை சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கான ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சாத்திய கூறுகள் தயாரிக்கும் பணிகள் துவங்கியிருக்கின்றன.
Vellore RRTS Train சிறப்பம்சங்கள் என்னென்ன?
மெட்ரோ ரயில்களை விட மூன்று மடங்கு வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்து அமைப்பாக இந்த அமைப்பு இருக்கும். 180 கிலோமீட்டர் வேகத்திற்கு ரயில்களை இயக்கும் வகையில் அமைப்பு உருவாக்கப்படும். இதன்மூலம் ரயில்கள் மணிக்கு சராசரியாக 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.
வேலூருக்கு செல்லும் வகையில் உள்ள காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவர்கள் பேருந்து மூலமாக சென்றாலும் நீண்ட நேரம் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ரயில் மூலமாக சென்றாலும் செங்கல்பட்டு வழியாக சுற்றிக்கொண்டு சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் காஞ்சிபுரத்திலிருந்து 25 நிமிடத்தில் சென்னை அடைய முடியும். இந்த திட்டம் போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















