ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டால்..! பொய் வழக்கா ? கொந்தளிக்கும் ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர்கள்..!
"மனரீதியாக அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே முன்னாள் காவலர் ஒருவரை நியமித்துள்ளார்கள் "என குற்றச்சாட்டை முன் வைக்கிறார் காசிமாயன்
ஒவ்வொரு இந்தியருக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவித்தல், அரசு செய்யும் தவறுகளை மக்கள் சுட்டிக்காட்டுவதற்கு இந்த சட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய தகவல்கள் பெறப்பட்டு பல, முறைகேடுகளை, சமூக ஆர்வலர்கள் படுத்தி வருகின்றனர்.
முக்கிய கோவில்களில் முறைகேடு
அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அ.டில்லிபாபு, இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களைப் பெற்று பல்வேறு முக்கிய கோவில்களில், நடைபெற்ற முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். காஞ்சிபுரம் ஏகாமநாதர் கோவிலில் முறைகேடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், உள்ளிட்ட கோவில் தொடர்பான தகவல் அறியும் உரிமை தகவல்களைப் பெற்று அதன் மூலம், சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்று அதன் மீது புகார் அளித்து வருவதால், தன் மீதும் தனது சகோதரர் மீதும் பொய் வழக்கு போடுவதாக, டில்லிபாபு புகார் தெரிவித்துள்ளார்.
மிரட்டப்படுவதாக புகார்
இதுகுறித்து டில்லி பாபு நம்மிடம் கூறுகையில், பல்வேறு கோவில்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் பெற்று, முறைகேடுகள் ஏதாவது நடைபெற்றதாக சந்தேகமும் பட்சத்தில் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகின்றோம். ஆனால் சமீப காலமாகவே தொடர்ந்து தங்கள் மிரட்டப்பட்டு வருவதாக கூறுகிறார் டில்லிபாபு. திருப்பணி சம்மந்தமான இந்து சமய ஆணையர் பிறப்பித்த உத்தரவையும், வெளிப்படுத்த முடியாது என்று கோவில் நிர்வாகம் மறுத்து வருகிறது. மேலும் 52-கிலோ வெள்ளி திருடு போனது சம்பந்தமாகவும் திருக்கோவிலில் நகை பொக்கிஷாரில் இருந்து பல கிலோ, வெள்ளி தங்கம் நகைகள், கணக்கில் வராத உலோக சிலைகள் குறித்து இதுவரை எந்தவிதமான வெளிப்படுத்தன்மையற்றும், ஆவணங்கள், புகைப்படங்களை, வெளிபடுத்தப்படாமல் மறைக்கப்பட்டு இருப்பதாலும், திருப்பணி சம்பந்தமான ஆவணங்களை ஒரு வருட காலமாக தராமலும், கொடுத்த சில ஆவணங்களில் முத்திரையோ, கையெப்பமோ இடாமல் ஆவணங்களை குறித்து ஏமாற்றியும், இந்த ஆவணங்களை கேட்கச் சென்ற பொழுது எங்கள் மீது பொய் வழக்குகளை போட்டு திருப்பணி சம்பந்தமாக நீங்கள் ஈடுபடக்கூடாது, என்று எங்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செயல் அலுவலர் வேதமூர்த்தி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் மாண்பமை தகவல் ஆணையர் ஸ்ரீதர் அவர்கள் கடந்த 14-06-2023 தேதி திருப்பணி சம்மந்தமான உத்தரவு பிறப்பித்தும் திருப்பணி சம்பந்தமான ஆவணங்களை வழங்க உத்தரவிட்டும், இதுவரை எவ்வித ஆவணமும் அளிக்காமல், திருப்பணி சம்மந்தமாக பெரும் தொகையை முறைகேடு செய்து கையாடல் செய்ய திட்டம்மிட்டுள்ளதால், அறங்காவலர் ஜெகன்நாதன் , எங்கள் மீது வழக்கு போட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதையெடுத்து 20-06-2023 தேதி tn police இணையம் வழியாக பார்த்த போது எங்களுக்கு தெரிய வந்தது. இதில் வேண்டும் என்றே அறங்காவலர் ஜெகன் நாதன் அவர்கள் 30-03-2023 தேதி கோயிலில், இவரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் . தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெறக்கூடாது, என திட்டமிட்டு தங்கள் மீது இது போன்ற பொய் வழக்குகளை போடுவதாக புகார் தெரிவிக்கிறார் டில்லிபாபு.
சென்னையை சேர்ந்த ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர், காசிமாயன் பல்வேறு துறைகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தகவல்களைப் பெற்று, துறை ரீதியாக நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறார். பல்வேறு துறைகளில் நடைபெற்ற, ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காசிமாயன், பல அதிகாரிகள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இந்தநிலையில், இவருக்கும் பல்வேறு வகையில் மிரட்டல்கள் வருவதாகவும், புகார் தெரிவிக்கிறார் காசிமாயன்.
மனரீதியாக அச்சுறுத்த வேண்டும்
இது குறித்து காசிமாயன் நம்மிடம் கூறுகையில், "தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தகவல்களை பெறும், செயல்பாட்டிற்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வகையில் அச்சுறுத்தல் வருவதால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பலரும் கேள்வி கேட்பது தவிர்த்து வருகின்றனர். பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கேள்விகள் எழுப்பினாலும், தகவல்கள் அளிப்பதில்லை என குற்றச்சாட்டை முன் வைக்கிறார். தமிழகத்தின் மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுபவர்களை மனரீதியாக அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே முன்னாள் காவலர் ஒருவரை நியமித்துள்ளார்கள். சமூக ஆர்வலர்களோ அல்லது முன்னாள் நீதிபதி போன்றவர்களை இந்த இடத்தில் நியமித்தாலே முறையாக தகவல்களை பெற முடியும்” கூறுகிறார் காசிமாயன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே, சமூக செயல்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.