மேலும் அறிய
Advertisement
அழியும் நிலையில் 1000 ஆண்டு பழமையான கல்வெட்டுக்கள் : கண்டுகொள்வார்களா சம்பந்தப்பட்ட துறையினர்?
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்துக்கு உட்பட்ட பழையசீவரம் கிராமத்தில் இருக்கும் கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திலுள்ளது பழைய சீவரம் கிராமம். இக்கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் சாலையோரத்தில், மண்ணில் புதைந்து மறையும் தருவாயிலும் கட்டுமானத்திற்கு பயன்பட்டு காணாமல் போகும் அபாய நிலையில் இருப்பதாகவும் இக்கல்வெட்டுக்கள் அதன் அருமை தெரியாமல் யாரும் கேட்பாரின்றி கவனிப்பாரின்றி கிடப்பதாகவும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரிடமிருந்து எழுந்துள்ளது .
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது, ”காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு என்று மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் அருகில் பாலாற்றங்கரையில் உள்ள கிராமம் பழையசீவரம் ஆகும். இக்கிராமத்தில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் 11ஆம் நூற்றாண்டை சார்ந்த முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு உள்ளது. அப்போது இவ்வூருக்கு சீயபுரம் என்று பெயர் இருந்ததாக கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.
மேலும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டும் இங்கு காணப்படுகிறது. மேலும் ஆண்டிற்கு ஒருமுறை காணும் பொங்கல் அன்று காஞ்சி வரதராஜ பெருமாள் பார் வேட்டைக்கு, இங்கு வந்து ஒரு நாள் முழுவதும் இருந்து செல்லும் மரபு பல நூற்றாண்டுகளாக தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற இவ்வூரில் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அரிதாக 6 அடி உயரத்தில் சிவனின் 54-வது அவதாரமான பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை வலது கரத்தில், பிரம்மாவின் தலையை ஏந்தியும் இடது கரத்தில், மழுவை ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
இது கந்தபாலீஸ்வரர் எனும் பழமையான சிவன் கோவிலில் சிலையாகும். இக்கோவிலின் சிலை உள்ளதே, தவிர கோயில் இல்லை சிதைந்த சிறிய அளவிலான சில கருங்கற்களே காணப்படுகின்றன, மற்ற கட்டுமானங்கள் ஏதும் காணப்படவில்லை. இந்நிலையில், இக்கோயிலுக்கு அருகே கல்வெட்டுக்கள் நிறைந்த குமுதப்பட்டை கற்களும், சில துண்டு கல்வெட்டுக்களும், காணப்படுகின்றன. மேலும் ஊரில் ஆங்காங்கு இதுபோன்ற கல்வெட்டுக்கள் கொண்ட பல கற்கள் காணக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்களின் எழுத்தமைப்பைப்கொண்டு, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதலாம், இது பழமையான சிவாலாயமான கந்தபாலீஸ்வரர் கோவிலின் கட்டுமானம் கற்களாகவே இருக்க வாய்ப்புள்ளது.
இதன் அருமை தெரியாமல் தற்போது பழையசீவரம் மேலண்டை ராஜ வீதியில் சாலையோரங்களில் கவனிப்பாரின்றி மண்ணில் புதைந்த நிலையிலும் , கட்டுமானங்களுக்கு பயன்பட்டு அழியும் நிலையிலும் உள்ளது. எனவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று ஆவணமாகத் திகழும், இந்த வரலாற்று ஆவண்மான கல்வெட்டுக்களை உரிய கவனம் செலுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அல்லது தொல்லியல் துறையோ சம்பந்தப்பட்ட துறையினர், இவற்றை பத்திரப்படுத்தி கல்வெட்டில் உள்ள தகவல்களை படித்து ஆராய்ந்து வரலாற்றை ஆவணப்படுத்தி பதிவு செய்து பாதுகாக்க வேண்டும்.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு அடையாளமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும், இதுபோன்ற ஆவணங்களை காப்பது காலத்தின் கட்டாயமாகும் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion