கடுமையாகிறது ஆசிரியர்களுக்கான கட்டுப்பாடு; ஆன்லைன் வகுப்பு குறித்து அமைச்சர் ஆலோசனை
சென்னையின் பிரபல பள்ளியின் ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளில் ஆபாசமாக நடந்துகொண்டதை அடுத்து ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களுக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள பிரபல பள்ளியின் ஆசிரியர் பாலியல் குற்ற விவகாரத்தை அடுத்து பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புக்கான கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.இதன்படி ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்கிற கடுமையான விதிமுறைகள் வரையறுக்கப்பட உள்ளன. இதுதொடர்பான அரசின் விரிவான அறிக்கை இன்று மாலை வெளியாக இருக்கிறது. மேலும் அதிகரித்துவரும் பாலியல் குற்றப்புகாரைக் கருத்தில் கொண்டு பாலியல் புகார்களை விசாரிக்கத் தனிக்குழுவை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. கூடுதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபால் பணி செய்த பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு சம்மன் அனுப்பவும் அமைச்சர் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு காரணமான அந்த விவகாரத்தின் பின்னணி இதோ:
சென்னை கே.கே.நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் மீது இந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பியதும், மாணவிகளுடனான ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணத்தில் மாணவிகளுக்கு அவர் பாடம் எடுத்ததையும் ஆதாரத்துடன் அவர் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் மாணவிகளை இரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்துவதும், திரைப்படங்களுக்கு செல்ல அழைப்பதும் என்று மாணவிகளுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது. முன்னாள் மாணவியின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புகார் தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என்றும், ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சென்னை, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். நங்கநல்லூரில் வசித்து வரும் ஆசிரியர் ராஜகோபாலனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு இருந்த அவரது லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால், இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன் ஆசிரியர் ராஜகோபாலன் தனது செல்போனில் இருந்த வாட்ஸ் அப் உரையாடல் மற்றும் மாணவிகளுக்கு அனுப்பிய அந்தரங்க புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்கியுள்ளார். ஆனால், போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் அவர் செல்போனில் நீக்கிய அனைத்து தகவல்களையும் மீண்டும் மீட்டனர்.
பின்னர், அந்த ஆதாரங்களுடன் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதும், அவர்களுக்கு ஆபாச படங்களின் இணைப்புகளை வகுப்பு குழுவிலே பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் இந்த பள்ளியில் தன்னைப் போன்றே மேலும் சில ஆசிரியர்கள் உள்ளதாகவும். அவர்களும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்தனர். ராஜகோபாலன் மீது 12 Red with 11 I, II, III, IV போக்சோ சட்ட, 354(A), 509, 67, 67(A It act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை ஜூன் 8 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அப்துல் பரூக் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read: போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்கு; ஜூன் 8 வரை நீதிமன்ற காவல்!