CRZ Violation : மரக்காணத்தை நோக்கி படையெடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் , அழிவின் விழும்பில் 20 மீனவ கிராமங்கள் !
கடந்த 10 வருடங்களாக மரக்காணம் பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ள ரியல் எஸ்டேட் கம்பெனிகள் , சட்ட விரோதமாக மணல்மேடுகளை கரைத்து பீச் ரெசார்ட்களை கட்டி வருகின்றனர் . இந்த விதி மீறல்களால் சமீபகாலமாக கடல் சீற்றத்தின்பொழுது, வீடுகள் மற்றும் கப்பல்கள் சேதம் அடைவது , உப்பளங்களில் தண்ணீர் புகுந்து நஷ்டம் ஏற்படுவது உள்ளிட்ட பாதிப்புக்கள் அதிகரிவருகிறது .இந்த நிலை தொடர்ந்தால் , கடலோர மீனவ கிராமங்கள் மட்டும் இல்லாமல் , ஒட்டுமொத்த மரக்காணம் பேரூராட்சியும் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார் .
உலகம் உருவான காலம் தொட்டே, பூமி பல இயற்கை சீற்றங்களை கண்டிருந்த போதிலும் , டிசம்பர் 26, 2004-ஆம் ஆண்டு உலகை புரட்டிப்போட்ட ஆழிப்பேரலையை யாராலும் மறந்திருக்க முடியாது !இந்த சுனாமியின் தாக்குதலால் உலகெங்கும் 2 ,30,000 மனிதஉயிர்கள் சில நிமிடங்களில் சூறையாடப்பட்டது. சுனாமி என்ற பெயரை அதுவரை கேள்விப்படாத தமிழ்நாட்டில் கூட , பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, இறந்தவரின் உடல்களுக்கு கடைசி ஈமச்சடங்கு கூட முறையே செய்ய முடியாமல் , பிணக்குவியல்களை கடற்கரை ஓரங்களில் புதைக்கப்பட்ட காட்சிகள் , 16 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நீங்காத துயரமாகவே இருந்துவருகிறது .
சுனாமியில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது , விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் தான் மிகவும் குறைந்தளவு பாதிப்புகள் பதிவாகியிருந்தது . "இதற்கு முக்கிய காரணமே இங்கு இயற்கையாக உருவாகியிருக்கும் மண்மேடுகள்தான்" என்று பதிவு செய்திருக்கின்றனர் , விழுப்புரம் பகுதியில் சுனாமிக்கு பிறகு ஆய்வு நடத்திய சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 18 மீனவ கிராமங்களுக்கும், இங்கு அமைந்துள்ள மணல்மேடுகள் தான் இயற்கை அரணாக செயல்பட்டு வருகின்றது. இத்தகைய மணல்மேடுகளைத்தான் தற்பொழுது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அழித்து வருகின்றன .
இது தொடர்பான செய்தி சேகரிப்புக்காக நாம் மரக்காணம் சென்று, அங்குள்ள சமூக ஆர்வலர் கணேசனை தொடர்புகொண்டபொழுது , மரக்காணம் பேரூராட்சியை பொறுத்தவரையிலும் முட்டுக்காடு தொடங்கி - புத்துப்பட்டு வரையுள்ள 25 கிலோமீட்டர் ஈசிஆர் பகுதியில் 18 மீனவ கிராமங்கள் உள்ளது . மீன்பிடி மற்றும் உப்புதயாரிப்பது தான் இங்கிருக்கும் மக்களுக்கு பிரதான தொழில். வங்காள விரிகுடாவை ஒட்டி இந்த மீனவ கிராமங்கள் அமைந்துள்ளதால், புயல் சின்னம் உருவாகும்போதும் , பருவமழை காலங்களிலும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருக்கும்.
இது போலவே மாதத்தில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்படும் . இதுபோன்ற நேரங்களில் மரக்காணம் கடற்கரையோர பகுதிகளில் இயற்கையாக அமைந்திருக்கும் 50 அடி உயரம் வரையுள்ள மணல் மேடுகள்தான். கடல் சீற்றத்திலிருந்து மீனவ மக்கள் வசிக்கும் வீடுகள் , கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம் அடையாமல் காத்து வந்தது .
ஆனால் கடந்த 10 வருடங்களாக மரக்காணம் பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ள ரியல் எஸ்டேட் கம்பெனிகள் , சட்ட விரோதமாக மணல்மேடுகளை கரைத்து பீச் ரெசார்ட்களை கட்டி வருகின்றனர் . இந்த விதி மீறல்களால் சமீபகாலமாக கடல் சீற்றத்தின்பொழுது, வீடுகள் மற்றும் கப்பல்கள் சேதம் அடைவது , உப்பளங்களில் தண்ணீர் புகுந்து நஷ்டம் ஏற்படுவது உள்ளிட்ட பாதிப்புக்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் , கடலோர மீனவ கிராமங்கள் மட்டும் இல்லாமல் , ஒட்டுமொத்த மரக்காணம் பேரூராட்சியும் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார் .
மேலும் மரக்காணம் பகுதியிலுள்ள மீனவ மக்களை நேரடியாக சந்தித்து பேசிய பொழுது "அங்கிருக்கும் பெரும்பாலானோர் அவர்களது பகுதியில் புதியதாக தொடங்கியிருக்கும் மஞ்சு குரூப்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது மிகுந்த அச்சத்துடன் இருந்தனர் . சென்னையை மையமாக கொண்டு செயல் படும் 'மஞ்சு குரூப்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் , நில ஆக்ரமிப்பு உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இங்குள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர் .
ABP நாடு செய்தி குழுமத்திடம் இது குறித்து பேசிய சர்வேஷ்குமார் என்ற சுற்றுசூழல் ஆர்வலர் , 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் போது பிற கடலோர மாவட்டங்களில் உயிரிழப்புகள் , பல ஆயிரங்களை தாண்டியபொழுது , விழுப்புரம் மாவட்டத்தில் , 300-க்கும் குறைவான உயிரிழப்புகள் தான் பதிவானது , இதில் மரக்காணம் பகுதியில் வெறும் 35 உயிரிழப்புகளும், வானூர் மட்டும் கோட்டக்குப்பம் பகுதிகளில் 250 உயிரிழப்புகளும் பதிவானது . இந்த 300 உயிர் இழப்புகளும் மணல்மேடுகள் அழிக்கப்பட்ட இடங்களிலிருந்து தான் பதிவாகியுள்ளது என்று தெரிவித்த சர்வேஷ்குமார் , தற்பொழுது மரக்காணம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மஞ்சு குரூப்ஸ் என்ற கம்பெனி கடற்கரை ஒழுங்குமுறை குழுமத்தின் (Coastal regulation authority ) விதிகளுக்கு எதிராக 120 ஏக்கர் நிலப்பரப்பில் மனைப்பிரிவுகளை அமைத்து , இதில் மனை வாங்கும் தங்களது எலைட் வாடிக்கையாளர்களுக்கு கடலோரம் சொகுசு வீடுகள் கட்டித்தர உள்ளதாக விளம்பரங்கள் செய்து வருகின்றனர் .
இந்த 120 ஏக்கர் நிலப்பரப்பில் , 28 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம் , இதில் 8 மீனவ கிராமங்களுக்கு சொந்தமான இரண்டு சுடுகாடு , ஆடு மாடு வளர்ப்புக்கு பயன்படுத்தக் கூடிய மேய்ச்சல் நிலங்கள் , 4 குட்டைகள் மற்றும் வண்டிப்பாதை செல்வதற்கான இடம் உள்ளிட்டவைகளை ஆக்ரமிப்பிப்பு செய்துள்ளனர் .
ஏற்கனவே 5 வருடங்களுக்கு முன்பு இந்த தனியார் நிறுவனம் , மரக்காணம், கைபாணிக்குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மனைப்பிரிவுகளை அமைத்து விற்பனைசெய்த பொழுது விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்த தகவலை எடுத்துச்சென்று அவரது தலையிட்டால் அவர்கள் அமைத்திருந்த சாலை மற்றும் ஹை டைடு லைன்- (high tide line ) பகுதியுக்குள் அமைத்திருந்த தடுப்பது வேலிகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றி , இந்த இடம் வீட்டுமனைக்கு தகுதியற்றது என்று சான்றும் அளிக்கப்பட்டஅளிக்கப்பட்டது .
ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இந்த நிறுவனம் மீண்டும் 'நோ டெவெலப்மெண்ட் சோன்' பகுதியை , மரக்காணம் பேரூராட்சி அலுவுலர்கள் துணையுடன் வேலி அமைத்து , வீட்டுமனைகள் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் . மரக்காணம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள காவல்துறை , வருவாய் துறை , மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அணைத்து துறை அதிகாரிகளுக்கும் இது தொடர்பான புகாரை அனுப்பிய பொழுதும் , அதிகாரிகள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர் . மனைப்பிரிவுக்குள் அமைந்திருக்கும் பகுதி கடற்பகுதியை சார்ந்துள்ளதால் சென்னையிலுள்ள கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் (coastal zone management authority) இது தொடர்பாக புகார் அளிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார் .
இது தொடர்பாக நாம் மரக்காணம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி A மயில்வாகனன் - என்பவரை தொடர்பு கொண்ட பொழுது , மஞ்சு குரூப்ஸ் எந்த வித சட்ட விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும் , பேரூராட்சி மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநகரத்தில் இருந்து முறையாக அனுமதி பெற்று வீட்டுமனைகளை அமைத்து வருவதாகவும் மழுப்பலாக பதில் அளித்தார் .
இதுகுறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் , இதேபோன்று சென்னை மகாபலிபுரத்தில் GRT ரெசார்ட்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் நிறுவனம் கடற்கரை ஒழுங்குமுறை குழுமத்தின் விதிகளுக்கு எதிராக ரிசார்ட் கட்டிய விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயதாள், அந்த சட்டவிரோதமான கட்டிடத்தை உடனடியாக இடிக்கவும் ,விதிமீறல்களுக்காக 10 கோடி ருபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .
இது போன்று மரக்காணம் மஞ்சு குரூப்ஸ் விவகாரத்திலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . என்று தெரிவித்தார் .