பரந்தூர் விமான நிலையம் அமைக்க கள ஆய்வு செய்ய வருகை தரும் அரசு தரப்பு பேராசிரியர் மச்சநாதன் ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம்.
சென்னை பசுமை விமான நிலையம் ( Chennai Parandur Airport )
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800 -க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
346 ஆவது நாள் போராட்டம்
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள், 346 வது நாளாக பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கிராம சபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.
ஐஐடி குழுவினர் கள ஆய்வு
இந்நிலையில் தமிழ்நாடு அரசு துறை அமைச்சர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அரசு தரப்பில் பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் ஐஐடி குழுவினர் கள ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதன்படி பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் கள ஆய்வுக்கு வருகை தரும் ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அம்பேத்கார் சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தொடர் பதற்ற நிலை
ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஒட்டி 300- க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ஏகனாபுரம் கிராம மக்களின் உண்ணாவிரதம் போராட்டம் காரணமாக சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் மதுரமங்கலம் பகுதி வரை பேரணியாக சென்றதால், போலீசார் தடுத்து நிறுத்தி கிராம மக்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அடுத்து அவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
முதல் முறையாக வழக்கு பதிவு
ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அனுமதி இல்லாமல் பேரணியில் ஈடுபட்டதால் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200 பேர் மற்றும் நாகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20 நபர் என 220 கிராம மக்கள் மீது IPC 143, 341, 188 என முன்னறிவிப்பு இன்றி கூட்டம் கூடியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலை மறியல் செய்தது என 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.