Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோருக்கு வேறு வழித்தடத்தில் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பொங்கல் விடுமுறை முன்னிட்டு சொந்த வாகனங்களில், செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை
உலக தமிழர்கள் கொண்டாட கூடிய மிக முக்கிய விழாவாக பொங்கல் விழா இருந்து வருகிறது. உழவர் திருநாளாக பார்க்கப்படும் தைத்திருநாளை உலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும் கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் விழா வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வார விடுமுறை நாட்கள் மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறை என, தொடர் விடுமுறை வரவுள்ளது.
இதனால் பொங்கல் விடுமுறையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு சில நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய, சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முக்கிய வழித்தடம்
அதிகளவு கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால், ஒரு சிலர் சொந்த வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க உள்ளனர். இதனால் சொந்த வாகனங்களில் செல்பவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோருக்கு வேறு வழித்தடத்தில் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் இருந்து தென்மாவட்டத்தை நோக்கி, வெளியூர் செல்வோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தவிர்த்து, ஓஎம்ஆர் சாலை வழியாக, திருப்போரூா் - செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர் அருகே ரயில்வே பால வேலைகள் நடைபெற்று வருவதால், சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், மதுரவாயல் புறவழிச்சாலை மூலம் வெளியேறுவதையும் தவிர்க்கலாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
கவனம் தேவை
சொந்த வாகனங்களில் செல்பவர்கள் முடிந்த அளவு இரவு நேரத்தில் பயணத்தை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சாலையின் மையப் பகுதியில் செல்லக்கூடாது. இடது புறமாக செல்ல வேண்டும்.
குறிப்பாக கூடுவாஞ்சேரி முதல் தைலாவரம் வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேடு பள்ளமாக உள்ளது. எனவே அந்தப் பகுதியில் செல்பவர்கள் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளை நிற கோட்டை தாண்டி மெதுவாக செல்லுங்கள். ஒருவேளை வேகமாக சென்று பள்ளத்தில் வாகனத்தை விட்டால், பிரேக் பிடிக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்த்தல் நல்லது. அப்படியே பயணம் செய்தாலும் இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம். செல்லும் வழியில் காவல்துறையினர் சொல்லும் அறிவுரைகளையும் கேட்டுக் கொள்ளவும். அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்து மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுங்கள்.