பெட்ரோல் பங்க் ஊழியரை நூதன முறையில் ஏமாற்றி G Pay மூலம் பணம் பறிப்பு !!
பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் நூதன முறையில் ஏமாற்றி Gpay மூலம் பணத்தை அபகரித்த நபர் கைது. ரூ.9,200 மீட்பு. ஆட்டோ பறிமுதல்.

பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் நூதன முறையில் ஏமாற்றி Gpay மூலம் பணத்தை அபகரித்த நபர் கைது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சாந்தி ( வயது 31 ) என்பவர் மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். கடந்த 08 ம் தேதி அன்று காலை பெட்ரோல் பங்க்கில் இருந்த போது ,
அங்கு ஆட்டோவில் சவாரியாக வந்த நபர் , சாந்தியிடம் தான் சவாரியாக வந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.300 கொடுக்க வேண்டும் , கையில் பணம் இல்லை உங்களது Gpay - க்கு அனுப்புகிறேன் உங்களது செல்போனிலிருந்து எனது எண்ணுக்கு 1 ரூபாய் G pay அனுப்புங்கள் எனக் கூறியுள்ளார்.
சாந்தி ரூ.1 அனுப்பிய பிறகு , அந்த நபர் அவசரமாக போன் பேச வேண்டும் எனக் கூறி சாந்தியின் செல்போனை வாங்கி பேசி விட்டு செல்போனை சாந்தியிடம் கொடுத்து விட்டு ஆட்டோவில் சென்றுள்ளார். பின்னர் சாந்தி அவரது செல்போனில் வந்த செய்தியை பார்த்த போது, அவரது Gpay லிருந்து வேறொரு எண்ணுக்கு ரூ.14,500 அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
பின்பு தான் , உதவி கேட்ட நபர் தனது செல்போனிலிருந்து Gpay மூலம் அவருக்கு தெரிந்த நபருக்கு பணம் அனுப்பிக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. சாந்தி இது குறித்து மதுரவாயல் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், மோசடி மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரவாயல் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து, இவ்வழக்கில் தொடர்புடைய ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த பரத் ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து பணம் ரூ.9,200 மீட்கப்பட்டு குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பரத் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய தலைமறைவான நபரை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.
குடித்து விட்டு மனைவியை கத்தியால் தாக்கி தகாத வார்த்தையால் திட்டிய கணவர் !!
சென்னை வியாசர்பாடி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் பிரமிளா ( வயது 33 ) , இவரது கணவர் மகேஷ். பிரமிளா வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவரது கணவர் மகேஷ் குடித்து விட்டு வந்து அடிக்கடி தகராறு செய்வதாகவும், கடந்த 2024 - ம் ஆண்டு மகேஷ் குடித்து விட்டு மனைவி பிரமிளாவிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கியதால் , பிரமிளா கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிணையில் வந்த பின்னர் , இருவீட்டாரும் சமாதானம் செய்ததால் கணவர் மகேஷிடன் வாழ்ந்து வந்ததாகவும், இந்நிலையில் மகேஷ் வீட்டிலிருந்த போது மனைவியிடம் நான் கொடுத்த பணம் 1,000 ரூபாயை கொடு என கேட்டுள்ளார். பிரமிளா தர மறுத்த போது, ஆத்திரமடைந்த மகேஷ், தகாத வார்த்தைகளால் பேசி, பிரமிளாவை கையால் தாக்கி விட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இரத்தக் காயமடைந்த பிரமிளா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் தன்னை தாக்கிய தனது கணவர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பிரமிளா எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மகேஷ் ( வயது 38 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.





















